துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, அஜித்தின் 62 ஆவது பட அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, விக்னேஷ் சிவன் எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், விக்னேஷ் சிவன் – தயாரிப்பு நிறுவனம் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து ப்ராஜெக்ட்க்குள் வந்து சேர்ந்தார் இயக்குனர் மகிழ்திருமேனி. அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி இதன் அறிவிப்பு வெளியானது. அது மட்டுமல்லாமல் சர்ப்ரைஸ் ஆக விடாமுயற்சி என படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், தொடர்ந்து வி வரிசையிலேயே படத்தின் தலைப்பில் இருப்பதாக ரசிகர்கள் சலிப்புத் தட்டிக் கொண்டனர்.
இந்த நிலையில், டைட்டிலை அறிவிக்கப்பட்டதால் படத்தில் அப்டேட்டும் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக படக்குழு அமைதி காத்து வந்தது. வலிமை திரைப்படத்திலாவது சூட்டிங் சென்ற பிறகுதான் அப்டேட் வெளியாகவில்லை. ஆனால் இதில் படம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலையா என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் படம் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், விடாமுயற்சி கைவிடப்பட்டதாகவே கருதப்பட்டது. இதற்கு முழு காரணம் அஜித் குமார்தான் என்றும், படத்தில் கமிட் ஆகி விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு அவர் ஊர் சுற்றி வருவதாலேயே இந்த நிலைமை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இப்படியான சூழலில், கடந்த மாதம் முதல் வாரத்தில் விடாமுயற்சியின் சூட்டிங் தொடங்கியது. முதல் கட்டமாக அஜர்பைஜான் நாட்டில் படத்தை எடுத்து வருகின்றனர். இதில் அஜித், திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மங்காத்தாவுக்கு பிறகு அஜித் அர்ஜுன் ஜோடி மீண்டும் இணைந்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.
இந்த நிலையில் அஜர்பைஜானில் முக்கியமான கார் சேஸிங் காட்சியை படக்குழு எடுத்துள்ளார்களாம். இதற்கு அடுத்ததாக, படக்குழுவினர் துபாய் கிளம்புகிறார்களாம். அங்கு அஜித் – திரிஷா – அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த திரைப்படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





