பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை அனன்யா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி உள்ளிட்டோர் எவிக்ட் ஆகியிருக்கின்றனர். எழுத்தாளர் பவா செல்லதுரை தானாகே வெளியேற பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவர் அப்படி வெளியேற்றப்பட்டதுதான் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ரவீனா உள்ளிட்டோர் பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதனையடுத்து பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறி கமல் ஹாசன் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தார். ஆனால் கமலின் அந்த முடிவில் துளிகூட நியாயமில்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கொந்தளித்துவருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் விசித்திரா மற்றும் அர்ச்சனா ஆகியோர் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோரிடம்; உங்களிடம் பிரதீப் தவறாக பேசும்போதே தட்டி கேட்டிருக்க வேண்டியதுதானே என தொடர்ந்து கேட்டுவருகின்றனர். இதனால் அவர்களுக்கு எதிராக மாயா கேங் திரும்பியிருக்கிறது.
இப்படி பிரதீப்புக்காக பலரும் பேசிக்கொண்டிருக்க அவரோ தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் அடுத்த வேலையை பார்ப்போம் என்று ட்வீட் செய்தார். பிறகு தன்னை வைத்து வீட்டுக்குள் பிரச்னை நடந்துகொண்டிருப்பதை கவனித்த அவர் பிக்பாஸ் வீடு பற்றி எரிவதாக ஒரு மீம் ஒன்றை போட்டார். மேலும் கமல் ஹாசனுக்கு சொன்ன பிறந்தநாள் வாழ்த்தில், தீர விசாரிப்பதே மெய் என்று ஒரே போடாக போட்டார்.
இதற்கிடையே பிரதீப்பை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். அவர் இருந்தவரைதான் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு நல்ல விளையாட்டை கொடுத்தால் நான் பெரிய ஷோவை தருவேன். இந்த முறை எனது ஆட்டம் சிறப்பாக இருக்கும். ஒரு படத்தின் இடைவேளை முடிந்து வரும் இரண்டாம் பாதியில் இருக்கும் ரிவெஞ்ச் மோடில் எனது ஆட்டம் இருக்கும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
If you give me a good game, I'll give you a great show 🎈@EndemolShineIND@vijaytelevision@ikamalhaasan
I promise, I'll also behave. Oru intermission mudichuttu vara padothoda revenge mode second half madhiri aduren. https://t.co/g0saIPiDat#PaathuSeinga
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 10, 2023
இந்த ட்வீட்டில் விஜய் டிவி, கமல் ஹாசனையும் டேக் செய்திருக்கிறார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை பிரதீப் ஆண்டனி இரண்டாவது முறையாக வீட்டுக்குள் சென்றால் மாயா கேங் எல்லாம் சின்னாபின்னமாகிவிடும் என ரகளையாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





