நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மாவீரன் படம் வெற்றியடைந்த நிலையில், அயலான் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர லால் சலாம், அரண்மனை 4 படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, சினிமாவுக்குள் வந்தவர். அவருக்கு ஆரம்ப காலத்தில் பல விதங்களில் உதவி செய்தவர் தனுஷ். அவரது வளர்ச்சிக்கு அவரது பங்கு இருக்கிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் சிறப்பு காட்சியில் நடனமாகி இருக்கிறார்.
ஸ்ருதிஹாசனுடன் தனுஷ் நடித்த 3 படத்தில், பள்ளியில் படிக்கும்போது பக்கத்தில் இருக்கும் தனது நண்பனாக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் பக்கபலமாக இருந்தவர் தனுஷ் என்பது பலரும் அறிந்த உண்மைதான்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, தனுஷை மிஞ்சும் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் முன்னிலை பெற்றார். குழந்தைகள், குடும்பம் என தனுஷின் படங்களை விரும்பிய ஆடியன்ஸ் அப்படியே தனுஷ் பக்கம் சென்றால் தனுஷ் சிவகார்த்திகேயன் மீது ஆத்திரம் அடைந்தார். நமக்கே வில்லனாகி விட்டாரே என்று தொழில் எதிரியாக அவரை பாவித்து வருகிறார். அதனால்தான் அயலானை எதிர்த்து, கேப்டன் மில்லர் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதே போல், 25, 30 ஆண்டுகளுக்கு முன் புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் சரத்குமாரை நடிக்க வைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இந்த படங்களில் நடித்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார் சரத்குமார். இதனால், விஜயகாந்த் சற்று கோபமடைந்தார். அதே வேளையில் பத்திரிகைகளும் சரத்குமாருக்கு அதிக ஆதரவு காட்டி எழுத, பிரஸ்மீட் வைத்து பத்திரிகையாளர்களை அவமதித்து பேசி இருக்கிறார் விஜயகாந்த்.
அந்த நேரத்தில், சரத்குமாருக்கு நல்ல நல்ல படங்களாக தொடர்ந்து அமைந்தன. தவிர, பத்திரிகையாளர் மீது தனியாக மரியாதை, அன்பு காட்டுபவர் சரத்குமார். தன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே பத்திரிகையாளர்களிடம் பழகும் அணுகுமுறையால், அவரது செய்திகளுக்கு செய்தியாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதனால் சரத்குமார் வெகுவேகமாக முன்னேறி இருக்கிறார். நம்மால் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர், நம்மை மிஞ்சி விட்டாரே என்ற ஆத்திரமும் கோபமும் அன்று சரத்குமார் மீது விஜயகாந்துக்கு வந்தது போல, சிவகார்த்திகேயன் மீது தனுஷ்க்கு வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் காலம் மாறினாலும், இதுபோன்ற காட்சிகள் மாறாது போல.





