கோலிவுட் சினிமாவில் தனது நடனம் மற்றும் இயக்கத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் நடனத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர், அங்கிருந்து கிடைத்த சிறு சிறு வாய்ப்புகள் மூலம் நடிகராக வலம் வந்தார். பிறகு இயக்குனராகவும் அவர் அவதாரம் எடுக்க, ராகவா லாரன்ஸின் இந்த பயணம் சக்சஸ் புல்லாக அமைந்தது.
முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்களை எடுத்து அலறவிட்டார் ராகவா லாரன்ஸ். ஆனால் இந்த திரைப்படங்கள் போக அவர் நடித்த மற்ற திரைப்படங்கள் ஏதும் பெரிதாக எடுபடவில்லை. உதாரணமாக மொட்ட சிவா கெட்ட சிவா, ருத்ரன் ஆகிய திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.
இப்படியான சூழலில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இதில் லாரன்ஸ் நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனிடையே மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தனது பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை வைத்துக்கொண்ட லாரன்ஸ், பின்பு அதனை நீக்கினார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது,
“மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வெச்சதும், ரஜினிகாந்த் ரசிகர்களே வருத்தப்பட்டார்கள். சூப்பர் ஸ்டார் இருக்கும்போது நீங்கள் ஏன் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டு உள்ளீர்கள். இது தவறு இல்லையா என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு அந்த அளவு முதிர்ச்சி தன்மை இல்லை. இதனால் கோபம் அடைந்து விட்டேன்.
என்ன இது, நமக்குத் தலைவரை பிடிக்கும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று வைத்துக்கொண்டோம். அப்பாவின் பெயரை நாம் சேர்த்துக் கொள்வோமே. அப்படி என்று நினைத்துதான் நான் வைத்தேன். ஆனால் அதுவே ரிவர்ஸ் ஆனது, எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது. இது தொடர்பாக சாய் என்பவரிடம் தொடர்பு கொண்டு, நீங்களே விருப்பப்பட்டு இந்த பட்டத்தை போட்டுக் கொண்டதாக கூறுங்கள். இல்லையென்றால் இது தப்பாகிவிடும்.
உடனே அவர் சரி என்று என்னிடம் கூறினார். இது நடந்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்தபோது, அம்மாவே என்னிடம் கேட்டார்கள். உன்னுடைய தலைவர் பெயரை தானேப்பா வைத்தாய். இதை ஏன் தவறாக கேட்கிறார்கள் இன்று அவர் சொன்னார். விடுங்க அம்மா, தப்பா பேசிட்டாங்க இனிமேல் எனக்கு அது வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அது ஒன்றும் இல்லை கண்ணா இதில் தவறு எதுவும் இல்லை என்று என் அம்மா மீண்டும் கூறினார்கள்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.





