சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வெற்றி வாகை சூடியது. இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், கழுகு வானில் உயர பறந்து கொண்டே இருக்கும் என்றும், காகத்தால் எப்போதும் கழுகின் உயரத்தை அடைய முடியாது எனவும் தெரிவித்தார். ரஜினிகாந்த் விஜயைத் தான் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
நாளடைவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, விஜய் – ரஜினி ரசிகர்கள் இணையத்தில் மோதிக்கொண்டனர். அது மட்டுமல்லாமல் இணையத்தில் அவர்கள் தரக்குறைவாகவும் திட்டினர். இப்படியான சூழலில், லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஒரு காட்டில் யானை புலி சிங்கம் கழுகு காகம் இருக்கும். முயல் வேட்டையாட சென்றவனுக்கு அது எளிதில் கிடைத்து விட்டது. ஆனால் யானையை வேட்டையாட சென்றவனுக்கு கடைசி வரை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இங்கு யானையை வேட்டையாடச் சென்றவன் தான் நாம் பார்க்க வேண்டும். எதையுமே பெரிதாக நினைக்க வேண்டும்.
இங்கு புரட்சித்தலைவர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் மட்டும்தான். தல என்றால் அது அஜித் குமார் மட்டும் தான். அதேபோல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்று கூறி சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் இணையத்தில் இன்று வரை ரஜினி விஜய் ரசிகர்களிடையே ஒரு உரசல் இருந்து கொண்டு தான் வருகிறது.
இப்படியான சூழலில் தான் இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்திருக்கிறார் லெஜெண்ட் சரவணன். சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளரான அவர், முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார். அங்கிருந்து மெல்ல நடிப்பதற்கான ஆசையை வளர்த்துக்கொண்ட சரவணன், லெஜன்ட் படத்தில் நடித்த முடித்தார். படத்தின் மேக்கிங் சிறப்பாக வந்தாலும், அந்த அளவுக்கு திரைக்கதை எடுபடாததால், அதனை பலரும் கிண்டலடித்து வந்தனர்.
தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை இன்னும் சரவணன் வெளியிடாமல் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தக் காக்கா கழுகு கதைகள், இவருக்கு அந்தப் பட்டம் அவருக்கு இந்தப் பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டும் தான் முன்னேற்றம் என்று பேசியுள்ளார். லெஜெண்ட் சரவணனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, நமக்கு இது தேவைதானா அண்ணாச்சி என்று பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.





