கோலிவுட்டின் ஹெட் லைன்ஸாக மாறியிருக்கிறார் மன்சூர் அலிகான். லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை ரேப் செய்யும்படி காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை என்று த்ரிஷா குறித்தும் குஷ்பூ, ரோஜா குறித்தும் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
சூழல் இப்படி இருக்க அவரோ முதலில் அளித்த விளக்கத்திலும் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையிலும் துளிக்கூட வருத்தப்பட்டதாக தெரியவில்லை. மாறாக அலட்சியமாகவும், த்ரிஷாவுடன் மீண்டும் நடிப்பேன் என்றும் கூறினார். அவரது இந்தப் போக்கும் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மன்சூர் அலிகானுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டன அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அதுமட்டும் போதாது அவரை குறைந்தபட்சம் ஒரு வருடமாவது நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் மன்சூர் அலிகானுக்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலையும் நடிகர் சங்கம் தெரிவிக்கவில்லை.
இது ஒருபக்கம் இருக்க அவருக்கு தமிழ் திரையுலகிலிருந்து மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்தவகையில் நடிகர் சிரஞ்சீவி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் கூறிய கண்டிக்கத்தக்க கருத்து எனது கவனத்துக்கு வந்தது. இந்த கருத்து ஒரு கலைஞர் என்பவருக்கு மட்டுமில்லை ஒவ்வொரு பெண்னுக்கும் அருவருப்பானது ஆகும். இந்த கருத்துக்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிக்க வேண்டும், த்ரிஷாவுடன் நான் நிற்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குநரும், தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவ பாரதிராஜா, “நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடப்படும் வார்தைகள் மற்றவர்களை வலிக்க செய்யும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் மடிக்கும் சக நடிகை குறித்து வரம்பு மீறி பேசியிருக்கிறார்.
அதற்கு அவர் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல். மன்னிப்பு கேட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சிறந்த செயல். கலைஞர்கள் மேடையில் பேசும்போது காமெடி என்கிற பெயரிலோ சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்றோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.மன்னிப்பு கேட்பது மீசையில் மண் ஒட்டும் செயல் அல்ல. பெருந்தன்மையை கற்றுக்கொள்ள உதவும்” என கண்டனம் தெரிவித்து அறிவுறுத்தியிருக்கிறார்.





