தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய சரக்கு படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் வன்கொடுமை செய்யும் மாதிரியான சீன் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் போடலாம் என நினைத்தால் அது நடக்கவில்லை. 150 படங்களில் நான் பண்ணாத அட்டூழியமா” என பேசியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் இருந்து சிரஞ்சீவி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஒருபக்கம் எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டு இருந்தாலும் மறுபக்கம் இந்த விஷயத்தை அலட்சியமாகவே கையாண்டார் மன்சூர் அலிகான். நான் தவறான முறையில் எதுவும் பேசவில்லை. என்னால் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என தடாலடி காண்பித்தார்.
அதுமட்டுமின்றி அவருக்கு எதிராக வெளியிட்ட கண்டன அறிக்கையை திருப்பி பெற வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் நான்கு மணி நேரம் கெடு விதித்திருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபியிடம், மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தானாக முன் வந்து கோரிக்கை வைத்தது. இதனால் இந்த விஷயத்தில் மேற்கொண்டு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்விவகாரம் குறித்து த்ரிஷாவிடமும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. நிலைமை விபரீதமானதை உணர்ந்த மன்சூர் அலிகான் நேற்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி நடந்தவை குறித்து தன்னுடைய விளக்கத்தை அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், த்ரிஷாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றார். இந்த சூழலில் இன்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் ஏகப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டிருந்த அவர், எனது சக நாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு என கேட்டிருந்தார்.
To err is human,to forgive is divine🙏🏻
— Trish (@trishtrashers) November 24, 2023
இந்நிலையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை அடுத்து நடிகை த்ரிஷா, ’தவறு செய்வது மனித இயல்பு.. மன்னிப்பது தெய்வ பண்பு’ என குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் மன்சூர் அலிகானை மன்னித்துவிட்டது உறுதியாகிவிட்டது. எனவே மன்சூர்- த்ரிஷா பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.





