சினிமாவில் குறுகிய காலத்தில் வானளாவிய உயரத்திற்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அவர் இயக்கியது ஐந்தே ஐந்து திரைப்படங்கள் தான். ஆனால் அவருக்கு இருக்கும் வரவேற்பு என்பது இங்கு மற்றவர்கள் சொல்லி தெரிய தேவை இல்லை. அந்த அளவுக்கு அவர் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக சினிமாவில் வலம் வருகிறார்.
லியோ திரைப்படத்தை பொருத்தமட்டில் அவர், படத்தின் அறிவிப்பு வெளியாகும் போது அது எந்த தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது பிப்ரவரியில் லியோ அறிவிப்பு வெளியிடப்பட்ட சூழலில், சொல்லி வைத்தார் போல் அக்டோபர் 19ஆம் தேதி திரைப்படம் வெளியானது. இது திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்றது.
முதல் பாதி சூப்பராக உள்ளது என்றும், இரண்டாம் பாதி அந்த அளவுக்கு எடுபடவில்லை என்று சிலர் கூறினாலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விஜய்க்கு முந்தைய திரைப்படமான வாரிசு, மிகப்பெரிய வசூலை குவிக்காத சூழலில் அந்தக் குறையை லியோ தீர்த்ததாக பலரும் பேசிக் கொண்டனர். கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் அந்த திரைப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தற்போது புது சர்ச்சையாக, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் லலித் குமார் சம்பள பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு லியோ திரைப்படத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் என்றும், இதைத் தவணை முறையில் கொடுத்து வந்த லலித்குமார் கடைசியாக 5 கோடி பணத்தை தராமல் இழுத்தடிப்பதாகவும் பேச்சுகள் எழுதி உள்ளன. இதனால் கடும் அப்செட்டில் லோகேஷ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, சண்டை பயிற்சியாளர்களுக்கும் அன்பறிவ் மாஸ்டருக்குமே சூட்டிங் சமயத்தில் லலித் சம்பள பாக்கி வைத்ததாகவும், வேறு வழியில்லாமல் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் மீதி பணத்தை கொடுத்து படப்பிடிப்பை நடத்தக் கூறியதாகவும் பேச்சுகள் எழுகின்றன. இதன் காரணமாகவே கடும் அப்செட்டில் இருந்த லோகேஷ் கனகராஜ் போஸ்ட் ப்ரடக்சன் பணிகளை தனது நண்பர் ரத்தினவேலிடம் ஒப்படைத்துவிட்டு படத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை சில சினிமா விமர்சகர்கள் மறுத்துள்ளனர். லியோ படத்தில் லோகேஷ்க்கு 50 கோடி ரூபாய் சம்பளம் இல்லை என்றும், இந்த மாதிரி செய்திகளை திட்டமிட்டே யாரோ பரப்புகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். விக்ரம் படத்திற்கு முன்பாகவே லியோ படம் குறித்து பேசி முடித்து விட்டதாகவும், அதனால் லலித் குமார் லோகேஷுக்கு சம்பள பாக்கி வைக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதனிடையே இந்த சர்ச்சைகளை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாத லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.





