இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வருகிற 20ம் தேதி விடுதலை படத்தின் 2ம் பாகம் வெளியாக உள்ளது. கடந்தாண்டில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 2ம் பாகம் படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் நாயகனாக சூரி, வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர்.
வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் படைப்பாற்றல் மிக்க ஒரு நல்ல இயக்குனராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை, விடுதலை என அவர் இயக்கிய படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு கதைக்களத்தில் மக்களின் வாழ்வியலை சொல்லி வருகிறார்.
அந்த வகையில் மற்ற கமர்ஷியல் இயக்குனர்களை போல, குப்பை படங்களையும் மசாலா படங்களையும் தந்து ரசிகர்களை ஏமாற்றாமல், சிறந்த கதைகளை, நல்ல கதைகளத்தில் தந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். விடுதலை படமும் அந்த மாதிரியான உரிமை போராட்ட கதைக்களமாகவே அமைந்திருந்தது.
இந்நிலையில் வருகிற 20ம் தேதி வெளியாக உள்ள விடுதலை 2 படத்துக்கு, தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். அல்லது பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகள் இருக்கும் என்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் என பலரும் நினைத்தனர். ஏனெனில் விடுதலை முதல் பாகத்தில் அதுபோன்ற காட்சிகள் இருந்தன.
ஆனால் விடுதலை 2 படத்துக்கு தணிக்கைக்குழு, ஏ சான்றிதழ் வழங்கியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த படத்தில் ராஜீவ் மேனன், அரசு தலைமை செயலாளர் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரை பார்த்து ஒரு வசனம் பேசப்படுகிறது. படத்தை பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்குமாறு, இயக்குனர் வெற்றிமாறனிடம் கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு வெற்றிமாறன் மறுத்துவிட்டார். படத்தில் அது முக்கியமான காட்சியில் வரும் வசனம் என்பதால் நீக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்குவோம் என்றும் அதிகாரிகள் தரப்பில் எச்சரித்துள்ளனர். அப்போதும் வெற்றிமாறன், வசனத்தை நீக்க சம்மதிக்கவில்லை. அந்த படத்தில் இடம்பெற்ற அந்த ஒரே ஒரு வசனம் காரணமாக தணிக்கை குழு, விடுதலை 2 படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.





