நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் நாளை முதல் கொடைக்கானலில் துவங்குகிறது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற நடிகர் விஜய் அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்கு சென்றார்.
கடந்த வாரத்தில் கோவையில் தவெக கட்சியின் 2 நாள் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வேனில் வந்த நடிகர் விஜயை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம், தொண்டர்கள் கூட்டம் வழியில் அத்துமீறி நடந்துக்கொண்டது. விஜய் நின்றிருந்த வேன் மீது பாதுகாப்பையும் மீறி ஏறி அவரை தொடவும் கை குலுக்கவும் சிலர் முயற்சித்தனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய் இதுபோன்ற ஒழுங்கீனமாக செயல்களில் கட்சியினர் ஈடுபடக் கூடாது. என் மீது அதீத அன்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில் வரம்பு மீறுவது தவறு. இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. வேன் மீது ஏறுவது பைக்கில் வேகமாக வருவது போன்ற தகாத செயல்கள் கூடாது என்றும் எச்சரித்திருந்தார்.
அதே போல் இன்று மதுரை செல்வதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரைக்கு நான் சினிமா படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்ல வருகிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் கட்சி நிகழ்ச்சிக்கு மதுரைக்கு வரும்போது உங்களை சந்தித்து பேசுகிறேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் மதுரை விமான நிலையம் முன் திரண்ட ரசிகர்களும் கட்சியினரும் விமான நிலைய முன் பகுதிக்கு செல்ல முண்டியடித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். விமான நிலையத்திற்கு வெளியில் பெருங்குடி அம்பேத்கர் சிலை வரையில் சாலையில் விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர்.
இன்று மாலை நடிகர் விஜய் மதுரைக்கு வந்தபோது அவரைப் பார்க்க வெளியே காத்திருந்த தொண்டர்கள், ரசிகர்கள் விமான நிலைய முன்பகுதிக்கு திரண்டு சென்றனர். தடுப்புகளை தள்ளிவிட்டும் தடுப்பு வேலிகளை சேதப்படுத்தியும் சுவர்களில் ஏறி குறித்தும் உள்ளே நுழைந்தனர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து பெருங்குடி சந்திப்பு வரை ஒரு கிமீ தூரத்திற்கு திறந்திருந்த வேனில் தொண்டர்கள் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி விஜய் சென்றார். விஜயை காண திரண்டிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.





