நடிகர் சத்யராஜ், லெனின் போன்ற புரட்சியாளர்களின் கருத்துகளை விரும்புபவர். கடவுள் மறுப்பாளர். தனது படங்களில் கடவுள் பக்தி மிக்கவராக பல காட்சிகளில் நடித்தாலும் நிஜ வாழ்வில் பெரியார் வழி நடப்பவர். குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தனது எதிர்மறை கருத்துகளை கூறி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில், பிரதமர் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் சத்யராஜ் தரப்பில் அப்படி எதுவும் கிடையாது என்று மறுத்துள்ள நிலையில், இந்த தகவலை கூறியவரே சத்யராஜ் மகள் திவ்யா தான் என்ற தகவலும் பரபரப்பாகி வருகிறது. இதில் எது உண்மை என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் சத்யராஜை மோடி கேரக்டரிலும், இயக்குனரும் நடிகருமான மணிவண்ணனை அமித்ஷா கேரக்டரிலும் நடிக்கமாறு ஒரு பிரபல நடிகர் அவர்கள் இருவரிடமும் நேரடியாகவே சொல்லி இருக்கிறார் என்ற தகவல், இப்போது வெளிவந்துள்ளது.
நடிகர் சத்யராஜூக்கு, இயக்குனர் மணிவண்ணன் ஒரு குரு என்றே சொல்லலாம். அவரும் புரட்சிக்கரமான சிந்தனைகளை கொண்டவர். கடவுள் மறுப்பாளர். மணிவண்ணன் இயக்கிய சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, வாழ்க்கை சக்கரம் போன்ற படங்கள் தான் சத்யராஜூக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் அமைதிப்படை அமாவாசை கேரக்டரை யாராலும் மறக்கவே முடியாது. 1990 காலகட்டத்தில் அப்படி ஒரு அரசியல் நையாண்டி படத்தை மணிவண்ணன் இயக்கவும், அப்படி ஒரு நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ கேரக்டரில் சத்யராஜ் நடிக்கவும் வேறு யாராக இருந்திருந்தாலும் அது நடந்திருக்காது. ஆனால் மணிவண்ணனும், சத்யராஜூம் கூட்டணி அமைத்து ஜெயித்து காட்டியிருந்தனர்.
இந்த படம் வெளியான பிறகான ஒரு காலகட்டத்தில்தான் சத்யராஜை நரேந்திர மோடியாகவும், மணிவண்ணனை அமித்ஷா கேரக்டரிலும் நடிக்குமாறு நடிகர் நிழல்கள் ரவி கூறியிருக்கிறார். ஏனெனில் சத்யராஜின் மிக நெருங்கிய நண்பர் நிழல்கள் ரவி. அதே போல் மணிவண்ணன் படங்களிலும் அவர் நடித்து வந்த நிலையில், ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது இப்படி ஒரு ஐடியாவை அவர் சொன்னதாக, இப்போது தகவல் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.





