இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். வரும் ஜனவரி 25ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, ஷிவானி ராஜசேகர், சத்யராஜ், ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், கிஷன் தாஸ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கும் மீனாட்சி சௌத்ரி தான், விஜய் நடித்து வரும் கோட் படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சலூன் படப்பிடிப்பு துவங்கிய காலகட்டத்தில் படத்தின் இயக்குநர் கோகுலுக்கும், ஹீரோ பாலாஜிக்கும் மோதல், இருவரும் படப்பிடிப்பில் சண்டைக்கோழிகளாக நடந்துக்கொள்கின்றனர் என தகவல்கள் பரவியது. சமீபத்தில் அந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, அது உண்மைதான். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையில் புரிதல் இல்லாததால், பிரச்னை ஏற்பட்டது என்று ஒத்துக்கொண்டார்.
இந்த படத்தின் முதல் காப்பியை பார்த்த ஆர்ஜே பாலாஜி, இந்த படம் வெளிவந்தால் என் இமேஜே போய்விடும். அந்தளவுக்கு என்னை மிக மோசமாக இந்த படத்தில் இயக்குநர் கோகுல் காட்டியிருக்கிறார். இந்த படத்தை தயவு செய்து வெளியிட வேண்டாம். இந்த படத்துக்கு பதிலாக, வேறொரு படத்தில் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் ஆர்ஜே பாலாஜி கெஞ்சிய சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில் இருவரையும் அழைத்து ஐசரி கணேஷ் சமாதானம் பேசிய நிலையில், படத்தில் சில காட்சி மாற்றங்களை செய்து இந்த படத்தை வெளியிடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள் என்று பேசிய ஆர்ஜே பாலாஜி, இந்த படத்தில் நிச்சயம் வேறு ஒரு பாலாஜியை நீங்கள் சந்திப்பீர்கள் என்றும் கூறி ஆர்வத்தை தூண்டி இருக்கிறார்.
இந்த படத்தில் மேலும் சில ஆச்சரியத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. முதன்முறையாக இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோல் செய்திருக்கிறார். அதே போல் நடிகர் ஜீவாவும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார். மற்றொரு பிரபல நட்சத்திர நடிகர் அதாவது நடிகர் அரவிந்த் சாமி இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





