தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கிய சரத்குமார் பெரிய அளவில் தமிழக அரசியல் களத்தில் வரவேற்பை பெறவில்லை. இப்போது பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகம் என்று சொன்னால் எனக்கு தெரியாது. தவெக என்று சொல்லுங்கள்.தவெக இவெக முவெக என்று சுருக்கமாக சொன்னால் தான் எனக்கு புரியும்.
விஜய் பேசும்போது திமுகவை தீய சக்தி என்று சொல்கிறார். முதலில் அவருக்கு யார் நல்லவங்க யார் கெட்டவங்க என்றே தெரியாது. மத்த கட்சிகளை எதிர்த்து பேசினால் அதுதான் அரசியல் என்று நினைச்சிட்டு பேசிட்டு இருக்கிறார். மத்திய அரசு மாநில அரசு பத்தி பேசினா தான் செய்தியா போடுவாங்கன்னு அப்படி பேசுறார்.
விஜய்க்கு பெரிய கூட்டம் கூடுவதால் அவரது கட்சி பெரிய கட்சி இல்லே. பாஜக தான் உலகத்திலேயே பெரிய கட்சி. விஜய் வளர்ந்த நடிகர். அவருக்கு நான் அறிவுரை சொல்ல முடியாது. அவரை நான் இன்னும் அரசியல்வாதியா ஏற்றுக்கொள்ளலே. எல்லோருக்கும் வீடு கார் பைக் வாங்கற அளவுக்கு வசதியை உருவாக்குவேன்னு சொல்கிறார்.
அது எப்படி சாத்தியம் என்று நான் கேட்கிறேன். விஜய் எப்படி அதை செய்வார் என்று விளக்கமாக சொன்னால் மக்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. சும்மா கார் பைக் வீடு கொடுப்பேன் என்று சொல்லக்கூடாது. தமிழ்நாடு 10 லட்சம் கோடி கடனில் இருக்குது. அந்த கடனில் இருந்து எப்படி மீண்டு வருவாங்க?
என்கிட்ட கேள்வி கேக்கற மாதிரி பத்திரிகையாளர் நீங்க முதலில் விஜய்கிட்ட கேள்வி கேளுங்க. நீங்கதான் ஒருத்தரை பெரிய ஆளா உருவாக்குறீங்க, மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று நடிகர் சரத்குமார் பேசியிருக்கிறார். சரத்குமார் பங்கு பெற்றுள்ள பாஜக கட்சிதான் என்னுடைய கொள்கை எதிரி என்று விஜய் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





