மனதுக்கு நெருக்கத்தை தரும் படங்கள், விரைவில் ரசிகர்களுக்கு பிடித்து விடுகின்றன. குறிப்பாக யதார்த்தமான கதாபாத்திரங்கள் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கும் அவை எளிதில், ஜனரஞ்சகமாக மக்களை சென்றடைகின்றன, அந்த வகையில், இறுகப்பற்று படம், ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இருக்கிறது.
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் ஆகிய படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான், இறுகப்பற்று படத்தை தயாரித்திருக்கிறது. நடிகர் வடிவேலு நடித்த எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
இறுகப்பற்று படத்தில் விக்ரம் பிரபு ஸ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்னதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம், இன்றைய சமூகச் சூழலில் தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, மனம் சார்ந்த பாகுபாடுகளை அடையாளப்படுத்துகிறது. விக்ரம் பிரபு – ஸ்ரத்தா, விதார்த் – அபர்னதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதிகளுக்குள் ஏற்படும் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளை இந்த படம் மையப்படுத்தி, அதற்கான தீர்வுகளை அழகாக சொல்லி இருக்கிறது.
குடும்பம் என்றால் கணவன் மனைவிக்குள் அடிப்படையானது புரிதல், ஒருவருக்கு ஒருவர் தனது கருத்துகளை, உணர்வுகளை பகிர்தல், விட்டுக்கொடுத்தல், பிரச்னைகளை கையாளும் விதம் என பலவிதமான விஷயங்களை, இந்த கதாபாத்திரங்கள் வாயிலாக இந்த படம் பேசுகிறது. குறிப்பாக, திருமணமான சில ஆண்டுகளில் மனதால் வேறுபட்டு வாழும் தம்பதிகளை, இந்த படம் நிச்சயம் யோசிக்க வைக்கிறது.
இதில் மனநல ஆலோசகராக வரும் ஸ்ரத்தா, மனைவியின் சில செயல்களால் மனம் நொறுங்கிப் போகும் விக்ரம் பிரபு, குண்டான மனைவியை தவிர்க்க நினைக்கும் விதார்த், பத்திரிகையாளராக ஸ்ரீ என, அவரவர் கேரக்டருக்கான நடிப்பில் சிறந்த பங்களிப்பை தந்திருக்கின்றனர். விவகாரத்துகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அதற்கான காரணங்களை சொல்லும் படமாக, ரசிகர்களை கவரும்படியாக இறுகப்பற்று இருக்கிறது.





