நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு அமரன் படம் ரிலீஸாகிறது. கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்பல்லவி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தி, அவரது பயோபிக் படமாக அமரன் படம் உருவாகி உள்ளது. இதில் முகுந்த் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று, சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் அஜீத்குமார் குறித்து பேசினார். அப்போது, நான் ஒரு நண்பரின் தீபாவளி கெட் டு கெதர் நிகழ்ச்சிக்கு சென்றேன். அங்கு நடிகர் அஜீத்குமார் இருந்தார். அவரை பார்த்ததும் நான் ஷாக் ஆகி விட்டேன். அப்போது என்னிடம் கைகுலுக்கிய அஜீத்குமார், வெல்கம் டு த பிக் லீக் என்றார். நான் புரியவில்லை சார் என்றேன்.
அதற்கு அவர் சிரித்துக்கொண்டே உங்கள் வளர்ச்சியை பார்த்து சிலர் பயப்படுகின்றனர், அதனால் வெல்கம் டூ த பிக் லீக் என்பது சரிதானே? என்று என்னிடம் சொன்னார் என்று இந்த விழாவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டு பேசினார். இது கோலிவுட் வட்டாரத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அஜீத்குமார், சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து பயப்படுவதாக சொன்னது யாரை என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.
வழக்கமாக அஜீத்குமார், பிறரது விஷயங்களில் தலையிடாதவர். புறம் பேசாதவர். தான் உண்டு, தன் வேலையுண்டு என எதிலும் விலகிச் செல்பவர். ஆனால் அவரே அப்படி குறிப்பிட்டு சொல்கிறார் என்றால், அது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது நடிகர் தனுஷா, அல்லது சிம்புவா, அல்லது விஜய் சேதுபதியா என பலரும் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். இது தற்போது பெரிய பேசுபொருளாக தமிழ் சினிமா வட்டாரத்தில் மாறி வருகிறது.





