தமிழ் சினிமாவில் கமல் இடத்தில் 1980களில் இருந்த நடிகர் மோகன். இவருக்கு வௌ்ளி விழா நாயகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இவர் பெரும்பாலான படங்களில் பாடகராக நடித்ததால் மைக் மோகன் என்ற பட்டப் பெயரும் பெற்றவர். 1990களில் அன்றைய காலகட்டத்தில் மோகன் நடித்த படம் என்றாலே அது வெள்ளிவிழா கண்டுவிடும்.
குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம், இதயக்கோவில், உயிரே உனக்காக, 100வது நாள், தென்றலே என்னைத் தொடு, மெல்லத் திறந்தது கதவு, கிளிஞ்சல்கள், குங்குமச் சிமிழ், விதி, நான் பாடும் பாடல் என மோகன் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்தது.
அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் நடிக்க வேண்டிய பல காதல் படங்களில் அவருக்கு பதிலாக நடித்தவர் மோகன்தான். அந்த அளவுக்கு இளமையாக, அழகாக இருந்த நடிகர் மோகன் கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர். அவருக்கு தமிழ் பேச வராது. அவருக்கு பின்னணி குரலாக ஒலித்தது, நடிகர் விஜயின் தாய் மாமா பாடகர் எஸ்என் சுரேந்தர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்துக்கு விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் முன்னுக்கு வந்த பிறகு, மோகன் போன்ற சீனியர்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அண்ணன், அப்பா, இன்ஸ்பெக்டர், டாக்டர் போன்ற வேடங்களில் நடிக்க நடிகர் மோகனுக்கு தேடி வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார். நடித்தால் ஹீரோ, இல்லை என்றால் நடிக்கவில்லை என்று சினிமாவை விட்டே பல ஆண்டுகளாக ஒதுங்கி இருந்தார் மைக் மோகன்.
இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் மைக் மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அப்பா விஜய் தனது குடும்பத்தை அழித்து விடுவதால், அவரை பழிவாங்க அவரது மகனை கடத்திச் சென்று வளர்த்து பெரியவனாக்கி, மகன் விஜயை, அப்பா விஜயுடன் மோத விடும் ஒரு வில்லன் கேரக்டரில் மைக் மோகன் படத்தில் வருகிறார்.
ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மோகன் வருகிறார், நிற்கிறார், போகிறார் என்ற அளவில்தான் அவரது வில்லன் நடிப்பு இருக்கிறதே தவிர, மற்ற கேரக்டர்களில் உள்ள முக்கியத்துவம் சிறிதும் மோகனுக்கு இல்லை. ஒருவேளை இன்னொரு விஜய் வில்லன் என்பதால் மோகனை, வெங்கட்பிரபு டம்மியாக விட்டிருக்கலாம். ஆனால் இந்த படத்திற்கு பிறகாவது மோகன் வில்லனாக நடிக்க யோசித்து மறுத்து விடலாம். ஏனெனில் வெள்ளிவிழா நாயகன் மோகன் பெயராவது அப்படியே நீடித்திருக்கும்.





