தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். துவக்கத்தில் நடன இயக்குனராக சினிமாவில் பணிபுரிந்த அவர் அமர்க்களம் என்ற அஜித்குமார் நடித்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடனமாடினார். தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அவருக்கு ஒரு செமி வில்லன் கேரக்டர் கொடுக்கப்பட்டது. அந்த படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
தொடர்ந்து அற்புதம், ஸ்டைல், முனி, பாண்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ராகவா லாரன்ஸ், நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. திகில் மற்றும் திரில் கலந்த காஞ்சனா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
அவரது படங்களில் நடனமும் நகைச்சுவை காட்சிகளும், பாடல்களும் சிறப்பாக அமைந்ததால் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் படங்களுக்கு தமிழ் சினிமா மார்க்கெட்டில் நல்ல வசூலும் கிடைத்தது. மேலும் ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவுவதில் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானார். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வறுமையால் கஷ்டப்படும் மக்களுக்கும் பணத்தை அள்ளித் தரும் அவரது செயலால் ராகவா லாரன்ஸ் பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 மற்றும் வை ராஜா வை, லால் சலாம் ஆகிய மூன்று படங்களை இயக்கி அதில் மாபெரும் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க முன்வந்தார். இதற்கான கதை, திரைக்கதையை ராகவா லாரன்ஸ் எழுதியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்த அந்த படம் கைவிடப்பட்டுள்ளது என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த படம் நிச்சயமாக உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பு கூட நடத்தாமல் படம் டிராப் செய்யப்பட்டுள்ளது. காஞ்சனா 4 கதை டிஸ்கஷனில் ராகவா லாரன்ஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே 3 படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க ராகவா மாஸ்டர் விரும்பவில்லையா என்று சந்தேகம் எழுந்த நிலையில், காரணம் அதுவல்ல என்று தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் நடிக்க தனக்கு சம்பளமாக 30 கோடி ரூபாய் வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணுவிடம் ராகவா லாரன்ஸ் கேட்டிருக்கிறார். அவர் அவ்வளவு பெரிய சம்பளம் தர முடியாது என்று மறுத்துவிட்ட நிலையில், இந்த படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. எனினும் சம்பளம் குறையும் பட்சத்தில் மீண்டும் இந்த படத்தை துவங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.





