தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். துவக்கத்தில் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன், அவ்வப்போது சினிமா நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்தார். விருது விழாக்களில் பங்கேற்று காம்பியரிங் செய்தார்.
அதன்பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படத்தில் ஓவியா அவருக்கு ஜோடியாக நடித்தார். காதல் மற்றும் காமெடியை மையமாக கொண்ட படங்களில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, எதிர்நீச்சல், ரஜினிமுருகன், சீமராஜா, காக்கிச்சட்டை, மான் கராத்தே, கடைக்குட்டி சிங்கம் என அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தன. கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி, பிரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா, சமந்தா என முன்னணி கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்தார்.
அதே நேரத்தில் டான், ஹீரோ, பிரின்ஸ், அயலான் என தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சில படங்கள் பிளாப் ஆனது. டாக்டர், மாவீரன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் சிங்கநடை ஆகிய படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல சினிமா மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியதாவது, தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ போன்ற ஒரு தோற்றத்தை தனது இணைய கூலிப்படைகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு பிளாப் நாயகன்தான்.
அயலான் படம் மிகப்பெரிய தோல்வி படம் என நமக்கு தெரியும். ஆனால் 5 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த மிகப்பெரிய வெற்றிப் படம் என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவும். தனது இணைய கூலிப்படைகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு மிகப்பெரிய இமேஜ் இருப்பதை போல சிவகார்த்திகேயன் தோற்றம் ஏற்படுத்தி வருகிறார். வெறும் பில்டப்பில் மட்டுமே அவரது வண்டி சினிமாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது, என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.





