கடந்த 1980,90களில் முன்னணி நடிகராக இருந்தவர் ராம்கி. செந்தூரப்பூவே இணைந்த கைகள் இரண்டில் ஒன்று கருப்பு ரோஜா பெண்புத்தி முன்புத்தி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். இவரது ஹேர்ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு கட்டத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி எனக்கொரு மகன் பிறப்பான் போன்ற காமெடி படங்களில் ராம்கி நடித்தார்.
சமீபத்தில் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தில், கமிஷன் ஏஜண்ட் கேரக்டரில் நடித்த ராம்கியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அனுபவமிக்க அழுத்தமான நடிப்பை ராம்கி இந்த படத்தில் தந்திருந்தார்.
இந்நிலையில் சத்யராஜ் யோகி பாபு ஜெய் ஆனந்தராஜ் நிழல்கள் ரவி ரெடின் கிங்ஸ்லி மொட்டை ராஜேந்திரன் சிங்கம்புலி ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற 14-ம் தேதி பேபி அண்ட் பேபி என்ற படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லர் காட்சியின் படி ஜெய்யும் அவர் மனைவியும், யோகி பாபுவும் அவர் மனைவியும் தங்கள் குழந்தைகளுடன் ஒரே விமானத்தில் பயணிக்கின்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது குழந்தைகள் விமானத்தில் மாறிவிடுகிறது. குழந்தைக்கு எடைக்கு எடை காசு போடும் விழாவிற்காக தான் சத்யராஜின் மகன் ஜெய் அவரது மனைவியுடன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வருகிறார். அப்போதுதான் விமானத்தில் இந்த குழந்தை இடமாற்றம் நடந்து விடுகிறது.
ஜெய்யின் அப்பா சத்யராஜூக்கு எதிரிகள் அதிகமாக உள்ளனர். ஏதாவது ஒரு வழியில் பழிவாங்க நினைக்கின்றனர். குழந்தை மாறியதால் யோகி பாபு ஜெய் வீட்டுக்கு வந்து விடுகிறார். ஜெய்யின் மனைவியும் யோகி பாபுவின் மனைவியும் யாருக்கும் தெரியாமல் தங்களது சொந்தமான குழந்தையை கொஞ்சுவது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. சத்யராஜின் எதிரிகள் குழந்தையை கடத்திச் செல்வதுதான் படத்தின் கதை. இதை பார்த்த பலரும் இது ஏற்கனவே வந்த ராம்கி படத்தின் கதையாச்சே என்று கூறுகின்றனர்.
நடிகர் ராம்கி விவேக் குஷ்பு ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்த படம் எனக்கொரு மகன் பிறப்பான். 1990களில் வெளியான இந்த படத்தில் ராம்கியின் அம்மா வடிவுக்கரசிக்கு பெண் குழந்தை பிடிக்காது. அதனால் தனது நண்பன் விவேக்கின் ஆண் குழந்தையை, ராம்கி தன்னுடைய வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார். அதற்கு பின் நடக்கும் சம்பவங்களை காமெடியோடு சொல்லி இருப்பார்கள். அந்த கதையை கொஞ்சம் புது பெயிண்ட் அடித்து பேபி அண்ட் பேபி என்ற படமாக எடுத்திருக்கிறார்கள். இப்படி பழைய படத்தை காப்பி அடிப்பதை விடவே மாட்டார்களா என்று ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.





