நடிகர் ரஜினி, விஜய் போன்றவர்கள் தங்களது வளர்ச்சிக்கு ரசிகர்களை பல ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்பதே கசப்பான உண்மை. அரசியலுக்கு மேல இருக்கிற ஆண்டவன் சொன்னா கண்டிப்பா வருவேன், எப்ப வர்றேன், எப்படி வர்றேன்னு தெரியாது, ஆனா எப்போ வரணுமோ அப்போ கண்டிப்பா வருவேன், என வசனம் பேசி ரசிகர்களை உசுப்பேற்றியே தன் படங்களின் வெற்றிக்கு ரசிகர்களை பயன்படுத்திக் கொண்டவர்தான் ரஜினி.
அதே போல் விஜயும், தன் சினிமா வளர்ச்சிக்கு ரசிகர்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தி, ஆடியோ லான்ச்களில் டயலாக் பேசி, தன்னை நிஜத்திலும் ஹீரோவாக காட்டிக் கொள்பவர்தான் விஜய். ஆனால், இயக்குநர் சொன்னார் என்பதற்காக நல்ல அனுபவம் உள்ள மதிப்பு மிக்க நடிகர், தகாத வார்த்தையை பேசுவாரா என்று, இப்போது விமர்சிக்கப்பட்டு வருகிறார். தியேட்டரை சூறையாடிய ரசிகர்களும், அவர்களது தரம் என்னவென்பதை காட்டி விட்டனர்.
ஆனால், எளிய நிலையில் இருந்த தன்னை, இந்தளவுக்கு பேரும், புகழும் தந்து கார், பங்களா என்ற ஸ்டேட்டஸில் வாழ வைத்த, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க காரணம் ரசிகர்கள் மட்டுமே என்ற உண்மையை உணர்ந்த சில நடிகர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அவர்களில் முதன்மையாவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய வீடியோ கிளிப்பிங், இப்போது வைரலாகி வருகிறது. அதில் ரஜினி, விஜய் போன்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லும் விதமாக அவரது பேச்சு அமைந்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ் பேசுகையில், ரசிகர்கள் என்னை பார்க்க நேரில் வரவேண்டாம். இப்படி நான் இந்த முடிவெடுக்க காரணமே, என்னை பார்க்க வந்த ஒரு ரசிகர் விபத்தில் இறந்து விட்டார் என்பதால்தான். அவரது வீட்டில் போய் அழுதுவிட்டு வந்தேன். அப்படி இருக்கும் போது என்னை பார்க்க நீங்கள் வராதீங்க. ஆல்ரெடி எனக்காக நீங்க நிறைய பண்றீங்க. நான் உங்களை பார்க்க வர்றேன். உங்க ஊருக்கு வந்து நான் ஸ்டில்ஸ் கொடுக்கறேன். நீங்க என்னை பார்க்கணும். அவ்வளவுதானே. நான் உங்க வீட்டுக்கு வர்றேன். உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற கல்யாண மண்டபத்தை புக் பண்ணலாம். நாங்க அங்க வந்து, உங்களை எல்லாம் நேர்ல பார்த்துட்டு ஸ்டில்ஸ் கொடுத்துட்டு போறேன்.
நீங்க ஆடியோ ரிலீஸக்கு வந்து கை தட்டணும். நீங்க கை தட்டினா நான் மாஸ் காமிக்கணும். உங்க மாஸை வைத்துதான் நான் பணம் சம்பாதிக்கணும்.அப்படி எல்லாம் எனக்கு தேவையே இல்லை. உங்க உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். உங்க நேரத்தை உங்களுக்காக செலவு பண்ணனும். நீங்க ஒவ்வொருத்தரும் ஹீரோ ஆனா தான் எனக்கு சந்தோஷம்.
நீங்கள் உழைச்சு, உங்கள் குடும்பத்தை நீங்க பார்த்தா தான் எனக்கு சந்தோஷமே தவிர, உங்க நேரத்தை, வேலையை விட்டுட்டு என்னை பார்க்க நீங்கள் வந்தால், உங்களை கெடுப்பதே நானாகி விடுவேன். அதனால், தயவு செய்து உங்களை தேடி நானே வருகிறேன், என பேசி இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.





