நடிகர் லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் இயக்குநர் கே. பாக்யராஜின் உதவியாளராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். பாக்யராஜ் நடித்த, இயக்கிய பல படங்களில் அவரது உதவி இயக்குநராக பணி செய்தார்.
பூந்தோட்ட காவல்காரன் படத்தின் கதையை, உதவி இயக்குநராக நடிகர் விஜயகாந்தை சந்தித்து லிவிங்ஸ்டன் சொல்லி இருக்கிறார். அப்போது அவர் காட்டிய ரியாக்ஷனை கவனித்த விஜயகாந்த், அந்த படத்தில் அவரை நடிக்க வைத்தார். அப்படிதான் தமிழ் சினிமாவுக்குள் லிவிங்ஸ்டன் நடிக்க வந்தார்.
கேப்டன் பிரபாகரன், சுந்தரபுருஷன், என் புருஷன் குழந்தை மாதிரி, பாட்டுக்கு நான் அடிமை, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சொல்லாமலே, ப்ரியமான தோழி, சிவாஜி என பல படங்களில் நடித்திருக்கிறார். சுந்தரபுருஷன், என்புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் லிவிங்ஸ்டன்.
ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டரிலும் நடித்துவரும் லிவிங்ஸ்டன் சமீபமாக பட வாய்ப்புகள் இன்றி இருந்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் ஒரு கேரக்டரில் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். இதையடுத்து ரஜினி அவரை வீட்டுக்கே வரவழைத்து பேசி இருக்கிறார்.
லால் சலாம் படத்தில் தம்பி ராமையா நடித்துள்ள கேரக்டரில் ரஜினியுடன் அதிக காட்சிகளில் நடிக்க முதலில் பிக்ஸ் செய்யப்பட்டவர் லிவிங்ஸ்டன்தான். ஆனால், அவருக்கு படப்பிடிப்பு நேரத்தில் உடல்நலமின்றி போனதால், அந்த கேரக்டரில் தம்பி ராமையா நடித்திருக்கிறார். அதன்பிறகு மற்றொரு கேரக்டரில் லிவிங்ஸ்டன் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய லிவிங்ஸ்டன், இத்தனை காலமாக கிறிஸ்துவ மத்தில் இருந்து சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் ஒரு மாறுதல் காரணமாக இந்து மதத்துக்கு மாறிவிட்டேன். எனக்கு கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பில் சேர்ந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். லிவிங்ஸ்டன் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்ற நிலையில் இருந்து, இப்போது மாறியிருக்கிறார்.





