ரேடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி. பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராகி நான் ஸ்டாப் ஆக பேசி ரசிகர்களை மனதை வெகுவாக கவர்ந்தார். நானும் ரவுடிதான், கவலை வேண்டாம், தேவி உள்ளிட்ட சில படங்களில் காமெடி ரோலில் நடித்த ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி என்ற படம் மூலம் நடிகரானார். இந்த படமும் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை டைரக்ட் செய்து, ஆர்ஜே பாலாஜி நடித்தார். இந்த படங்களும் அவருக்கு பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தொடர்ந்து சொர்க்கவாசல் என்ற படத்தில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். 1996ம் ஆண்டில் சென்னையில் ஜெயில் ஒன்றில் நடந்த வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இதில் இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 29ம் தேதி திரைக்கு வருகிறது.
சொர்க்கவாசல் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, இந்த படத்தின் டிரெய்லர் நாளைக்கு வரப்போகுது என்று போஸ்டர் போட்டால், என்னுடைய விநியோகத்தர் எஸ்ஆர் பிரபு மீதான கோபத்தால் என்னை திட்டுகிறார்கள். நான் பாவாடை கிடையாது சங்கியும் கிடையாது.
இந்த படத்தை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. படம் நன்றாக இல்லை என்றால் சொல்லுங்கள். ஆனால் பழிவாங்கும் நோக்கத்தில் டார்கெட் பண்ணி அடிக்காதீங்க. நல்ல படம் எடுத்திருக்கிறோம் உங்கள் அனைவரின் ஆதரவும் இந்த படத்துக்கும் வேண்டும்.
அப்போதுதான் இந்த படம் வாழை, லப்பர் பந்து படங்கள் போல மக்கள் அனைவரிடமும் சென்று சேரும் என்று ஆர்ஜே பாலாஜி பேசியிருக்கிறார். ஆர்ஜே பாலாஜி முன்பெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு குறித்து சில விமர்சனங்களை கடுமையாக செய்தவர். அதனால் இந்த முறை தனது படங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதால் இப்படி கோரிக்கை வைத்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது.





