சினிமா என்பதற்கு கனவு தொழிற்சாலை என்ற பெயர் உண்டு. ஆனால் உண்மையில் அது கற்பனை தொழிற்சாலை தான். நடக்காத விஷயங்களை, உண்மை இல்லாத விஷயங்களை கற்பனையாக கதை எழுதி, அதற்கு கேரக்டர்கள் மூலம் உயிர் கொடுத்து, வசனங்கள் மூலம் அந்த கேரக்டர்களை வாழ வைத்து, ஒரு பொய்யை நிஜமான நாடகமாக்கி திரையில் காட்டுகின்றனர்.
கலையில் ஆர்வமுள்ள மக்களுக்கு இந்த நடிப்பும், வசனங்களும், பாட்டும், நடனங்களும் பிடித்துப் போனதால் திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இதில் வாழ்வியலை சொல்லும் படங்களும் இருக்கின்றன. பொழுதை போக்கும் படங்களும் இருக்கின்றன. இதில் காதலை, நட்பை, குடும்ப உறவுகளை, சமூக பிரச்னைகளை சொன்ன படங்களும் இருக்கின்றன. ஷகிலா நடித்த படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.
ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் போக்கு என்பது மிக மிக மோசமானதாக இருக்கிறது. கேங்ஸ்டர் கதைகள் என்ற பெயரில் இரண்டு குரூப்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளை மையப்படுத்தி வன்முறை படங்கள் அதிகமாக வருகின்றன. அல்லது, போதைப் பொருள் கடத்தல் சார்ந்த படங்கள் வெளியாகின்றன.
ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களுக்க தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் அவர்களது படங்களை தயாரிக்க, அவர்களை வைத்து படம் இயக்க இயக்குனர்களுக்கு மத்தியில் பெரிய போட்டியே நிலவுகிறது. ஆனால் அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி தயாரித்து உருவாகும் இந்த படங்கள், பிற ஹாலிவுட் படங்களின் உருவல் கதைகளாக இருக்கின்றன.
அதாவது 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு மாணவர்கள் கூட காப்பி அடிக்க சங்கோஜப்படும், மரியாதை குறைவாக நினைக்கும் இந்த காலகட்டத்தில், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பிற படங்களை பார்த்து அப்பட்டமாக காப்பியடித்து படம் எடுத்து, தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர் தமிழ்பட இயக்குனர்கள். இதில் குற்ற உணர்வே இல்லாமல் ஹீரோக்களும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் உண்மை கதைகளை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் மலையாள படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றிகளை, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. மஞ்சும்மெல் பாய்ஸ் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடி வசூலாகி உள்ளது. சமீபத்தில் வெளியாகி ஒரு வாரமே ஆன ஆடுஜீவிதம் படம் ரூ. 90 கோடியை வசூலித்துள்ளது. இப்படி மலையாள படங்கள் தொடர்ந்து உண்மை பேசி ஜெயிக்கின்றன. தமிழ் சினிமா இயக்குனர்கள் ஹாலிவுட் கதைகளை காப்பியடித்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் கசப்பான வேதனை.





