லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது அதற்கான போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படத்தில் வில்லனாக நாகர்ஜூனா நடித்திருக்கிறார். சோபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்டோரும் படத்தில் வருகிறார்கள். மிஸ்டர் பாரத் திரைப்படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் இதில் இணைந்திருக்கிறார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக பாலிவுட் நடிகர் அமீர்கான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பது பலரது எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது. இதை அவரே சமீபத்தில் உறுதிப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார். சூப்பர் ஹீரோ கான்செப்டில் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
கூலி திரைப்படத்தை முடித்த பிறகு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் ஈடுபட இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் இதன் படபிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கைதி திரைப்படத்தின் முந்தைய பாகமாகதான் இது எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் டில்லி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கார்த்தி. சிறை தண்டனையை முடித்துவிட்டு வெளிவரும் அவர் தனது மகளை காண்பதற்காக செல்வார். அப்போது போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே ஒரு மிகப்பெரிய மோதல் நடைபெற, கார்த்தி காவலர்களுக்கு உதவ அடுத்தடுத்து நடைபெறும் சம்பவத்தை சுவாரசியமாக காட்டி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ஒரு நாள் இரவில் நடைபெறும் கதையாக கைதி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் டில்லியின் மனைவி கதாபாத்திரம் உயிரிழப்பது போன்று கதை எழுதப்பட்டிருக்கும். இந்த சூழலில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தில், அந்த கேரக்டரில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்தி ஜோடியாக அவர் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





