திருமணம் என்பது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வாக தமிழர்கள் வாழ்வில் உள்ளது. ஒரு ஆணின் வாழ்விலும், பெண்ணின் வாழ்விலும் அது மிகப்பெரிய திருப்புமுனையாக வாழ்க்கையின் பாதையை மாற்றியமைக்கிறது. சிலருக்கு அந்த பாதை பூந்தோட்டமாகவும், சிலருக்கு மேடு பள்ளங்கள் என கரடுமுரடான பாதையாகவும் மாறி விடுகிறது.
ஆனால் சிலர் அதை வாழ்வில் நடக்கும் ஒரு மிக சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்கின்றனர். வித்யாசம் என்ற பெயரில் அதை காமெடியாகவும் மாற்றி விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் பாலிவுட் நடிகர் அமீர்கான் இல்ல திருமண நிகழ்வில் நடந்துள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமீர்கான் இந்தி படவுலகில் மிக முன்னணி நடிகராக இருப்பவர். தற்போது சென்னையில் தனது அம்மாவுடன் இருந்து வருகிறார். உடல் நலமில்லாத நிலையில், அவரது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக அவர் சென்னையில் தங்கியுள்ளார். சமீபத்தில் சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, பொதுமக்களில் ஒருவராக அவரும் படகு ஒன்றில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது, புகைப்படமாக வெளிவந்து வைரலானது.
சமீபத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமீர் கானின் முதல் மனைவி ரீனா தத் மகள் இராகானுக்கும், உடற்பயிற்சியாளர் நுபுர் ஷிக்காரேவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த திருமணத்துக்காக அனைவரும் திருமண மண்டபத்தில் வந்து காத்திருந்தனர்.
அப்போது தனது வீட்டில் இருந்து மண்டபத்துக்கு எட்டு கி.மீ., தூரம் மணமகன் நுபுர் ஷிக்காரே ஓடியே வந்துள்ளார். அதுவும் ஓடும் நேரங்களில் உடலில் அணியும் மிக சாதாரணமான பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து ரோட்டில் ஓடிவந்த அவர் அப்படியே திருமண மண்டபத்துக்கு புகுந்துள்ளார்.
பாலிவுட் ஸ்டார் அமீர்கானின் மாப்பிள்ளையாக நுபுர் ஷிக்காரே திருமண மேடையில் அதே கெட்டப்பில் ஏறியுள்ளார். அப்படியே அவர்களது திருமணமும் நடந்துள்ளது. வித்யாசம் என்ற பெயரில் எப்படி எல்லாம் காமெடி செய்கின்றனர் என கிண்டலடித்து, சமூக வலைதளங்களில் அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.





