இயக்குநர் அமீர், தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான, கவனிக்கத்தக்க படங்களை தந்த ஒரு இயக்குநர். குறிப்பாக பருத்தி வீரன், அமீர் இயக்கிய படங்களில் மிகவும் முக்கியமான படம். நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தியை, தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமாக்கியது இந்த படம்தான்.
டைரக்டர் அமீர் இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார். யோகி, வடசென்னை போன்ற படங்களை அதில் முக்கியமாக சொல்லலாம். இப்போது, மாயவலை என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். இதுதவிர சந்தனத் தேவன், உயிர்தமிழ் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணலில் இயக்குநர் அமீர் கூறியதாவது, என்னை பொருத்தவரை படங்களில் நடிக்கவும் செய்கிறேன். படங்களை இயக்கவும் செய்கிறேன். இரண்டிலும் என் பயணம், சரிசமமாகவே இருக்கிறது. வெற்றிமாறன், படத்தில் குறிப்பிட்ட அந்த கேரக்டரில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால், அவரை நடிக்க அழைத்தேன். நடிக்க அழைப்பது எப்படி என் உரிமையோ, அதுபோல் நடிக்க மறுக்கவும் அவருக்கு உரிமை இருக்கிறது.
மாயவலை படம் என்பது, உலகத்தையே திரும்பி பார்க்கிற வைக்கிற, சமுதாயத்தை புரட்டிப் போடுகிற மாதிரியான படம் எல்லாம் கிடையாது. திரில்லர் எமோஷனல் ஆக்சன் படம்தான். ஒரு இரவில், நான்கைந்து மனிதர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய ஒரு படம்தான்.
ஒரு கதையை உருவாக்கி அந்த படத்தை இயக்க முடிவு செய்யும்போது, அதில் வரும் கேரக்டர் இந்த மாதிரி இருக்க வேண்டும். இந்த மேனரிசங்களை கொண்டிருக்க வேண்டும் என, ஒரு இயக்குநர் விரும்புகிறார். ஒரு நடிகரை அணுகி, அந்த கேரக்டரில் நடிக்கச் சொல்லும்போது அதில் அவர் கதையை, கேரக்டரை தாண்டி தனது ஹீரோயிசத்தை, தனது வழக்கமான நடிப்பு ஸ்டைலை இந்த கேரக்டரில் எதிர்பார்த்து, அது இல்லை என்பதால் நடிக்க மறுத்து விடுகிறார்.
தனது வழக்கமான நடிப்பு அம்சங்கள் இல்லாத படங்களை ஏற்கவும், நடிக்கவும் ஹீரோ நடிகர்கள் தயங்கும்போது, மறுக்கும்போது அந்த நல்ல கதையில், இறுதியில் தானே நடிக்கும் ஒரு கட்டாய நிலைக்கு இயக்குநர் வந்துவிடுகிறார். அப்படித்தான், சேரன் ஆட்டோகிராப் படத்தில் ஹீரோவாக நடித்தார். மற்றபடி நடிகராக வேண்டும் என்று நினைத்தோ, காதல் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவதில்லை. நடிகர்கள் மறுக்கும் கதைகளில், இயக்குநர்கள் நடிக்கும் கட்டாயநிலை ஏற்படுகிறது என கூறி இருக்கிறார் அமீர்.





