தமிழ் சினிமாவில் 1990களில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. அர்ஜூன் நடித்த வானவில் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்து சமுத்திரம், மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
குறிப்பாக விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக அன்னலட்சுமி கேரக்டரில் நடித்திருந்தார். மதுரைக்கார பெண்ணாக அந்த கேரக்டரில் அவரை கமலஹாசன் வாழ வைத்திருந்தார். அதில் உன்னைவிட இந்த ஒலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லே பாடல் காட்சியில் கமலுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார்.
அதன்பிறகு திருமணம் செய்துக்கொண்ட அபிராமி, பல ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை. திருவனந்தபுரத்தில் கணவர், பிள்ளைகள் என செட்டிலாகி விட்டார். பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொடுக்கப்படும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். காரணம், அன்று ஸ்லிம் ஆக இருந்த அபிராமி, இப்போது அதிக உடல் எடையுடன் ஆண்ட்டியாக மாறி விட்டார். அதற்கேற்ப கேரக்டர்களே வருகின்றன.
டிவி சேனல் நடத்தும் நிகழ்ச்சியில் நடுவராகவும் அவ்வப்போது பங்கேற்று வரும் அபிராமி, தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் நயன்தாரா, திரிஷா போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் 2ம் நிலையில் உள்ள அபிராமி போன்றவர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அபிராமி, தமிழில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். விருமாண்டி படத்தில் நடித்த அன்னலட்சுமி, அந்த கேரக்டர் படி இறந்து விட்டார். அதனால் 2ம் பாகத்தில் அன்னலட்சுமியாக நான் நடிக்க முடியாது. ஒருவேளை கமல் அழைத்தால், கண்டிப்பாக நான் மறுக்க மாட்டேன். அவருடன் கட்டாயம் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.





