மனித ஆற்றலை செய்யப்படும் பணிகள் எப்போதுமே நிறைவை தரும் என்பதுதான் உண்மை. ஆனால் செயற்கையான ஆற்றலை பயன்படுத்தியும் நிறைய பணிகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் கைத்தறி ஆடையை அணிவதில் உள்ள சுகம், மற்ற ஆடைகளில் பலருக்கும் இருப்பதில்லை.
ஆனால் இன்றைய அவசர யுகத்தில் எல்லாமே இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மாறிவிட்டது. அந்த நவீன தொழில்நுட்பம் சினிமாவிலும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏதோ ஒரு ஏசி செய்யப்பட்ட உள் அரங்கில் நாயகன் நடிக்கும் காட்சிகள் நடுக்கடலிலும், தீ சூழ்ந்த காடுகளிலும் வானத்திலும் நடப்பது போலவும் திரையில் காட்சியாகி விடுகின்றன.
இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்படும் காட்சிகளுக்கான நாட்களை விட, இப்படி கிராபிக்ஸ் விஎப்எக்ஸ் சிஜி தொழில்நுட்பங்களுக்காக தான் அதிக நாட்களை ஒதுக்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஷங்கர் அட்லி போன்ற சில இயக்குனர்கள் கிராபிக்ஸ் விஎப்எக்ஸ் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டுதான் படத்தின் மற்ற காட்சிகளையே எடுக்க ஆரம்பிக்கின்றனர்.
ஹாலிவுட் சினிமாவில் அதிரடி சண்டை காட்சி நடிகராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஜாக்கிசான். 1980 90களில் சினிமா பார்த்த யாருமே ஜாக்கிசானை தவற விட்டிருக்க மாட்டார்கள். காமெடி கலந்த அவரது சண்டை காட்சிகளை பார்ப்பதே ரசிகர்களுக்கு பெரிய உற்சாகமாக இருக்கும். இதில் மற்றொரு பெரிய உண்மை என்னவென்றால் அப்படிப்பட்ட சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து விபத்தில் பலத்த காயமடைபவர்தான் ஜாக்கிசான். உடலில் பல இடங்களில் அவருக்கு ஆபரேசன் நடந்திருக்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் லோகேர்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ஜாக்கிசானுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகர் ஜாக்கிசான் கூறியதாவது, ஹாலிவுட் சண்டைக்காட்சிகள் இப்போது கிராபிக்ஸை நம்பி இருப்பதால் அவற்றில் உண்மை தன்மை இல்லை.
நாங்கள் ஆக்சன் படங்களில் நடித்த போது எங்களுக்கு இருந்த ஒரே வழி களத்தில் இறங்குவது தான். ஆனால் இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் நடிகர்கள் எதையும் செய்ய முடியும். ஆனால் அதில் யதார்த்தம் இல்லை என்பதை உணர முடிகிறது என்று நடிகர் ஜாக்கிசான் வெளிப்படையாக கூறியிருக்கிறார். நடிகர் ஜாக்கிசானின் இந்த கருத்து இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





