நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடந்தாண்டில் வெளியான 50வது படம் மகாராஜா. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடிய பிளாக் பஸ்டர் படமாக இருந்தது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து விஜய் சேதுபதிக்கு சூப்பர் கம்பேக் கொடுத்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கிய ஆகாசவீரன் படம் வெளிவர உள்ளது. இதில் பரோட்டா மாஸ்டராக மக்கள் செல்வன் நடித்திருக்கிறார். நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கிய டிரெயின் என்ற படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அந்த படமும் விரைவில் வெளிவர உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இந்த படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.
ஏஸ் என பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால் கடந்த 2024ம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் நடந்து முடிந்தது. விஜய் சேதுபதி நடித்த அவரது 51 வது படம் ஏஸ் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்த ஏஸ் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பல வித்யாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் விஜய் சேதுபதியுடன் வரும் விதமாக நடிகர் யோகி பாபு முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார். நடிகை ருக்மணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏஸ் படத்துக்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் ஏஸ் படத்தில் இருந்து உருகுது உருகுது என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கவிஞர் தாமரை எழுதிய இந்த பாடலை கபில் கபிலன், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில் ஏஸ் படம் வருகிற மே 23ம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.





