தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பிரபல டிரான்ஸ் மாஸ்டராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவரது முழு பெயர் ஷேக் ஜானி பாஷா என்று கூறப்படுகிறது. இவர் ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலய்யா பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர்.
அதேபோல் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்து இருந்தார். பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்களுக்கும் நடனம் அமைத்தவர் இவர்தான். பொதுவாக ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த குத்து பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வைரலானது.
அதனால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த பாடல்கள், பெரிய அளவில் புகழ்பெற்றன. இந்நிலையில் அவர் மீது தெலுங்கு படங்களில் நடன கலைஞராக இருக்கும் ஒரு இளம் பெண் ஜானி மாஸ்டர் மீது ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார் பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஜானி மாஸ்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடன இயக்குனர் ஜானி மீது அவரிடம் வேலை செய்த பெண் நடன கலைஞர் பாலியல் புகார் அளித்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆந்திரா மாநில துணை முதல்வரான பவன் கல்யாண், தனது ஜனசேனா கட்சியிலிருந்து நடன இயக்குனர் ஜானி மாஸ்டரை நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா பிலிம் சேம்பரில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து விசாரணையின் முடிவில் தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து நடன இயக்குனர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜானியை தனது படங்களில் நடனம் அமைக்க மாஸ்டராக கமிட் செய்திருந்த தமிழ், தெலுங்கு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் தற்போது இவர் வேண்டாம் என்று தவிர்க்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





