வாழ்க்கையில் எவ்வளவு உயரமான இடத்துக்கு சென்றாலும் பெயர், புகழ், பணம் என உச்ச நிலையில் வாழ்ந்தாலும் வாழ்க்கையின் அடிப்படை எதுவுமே நிரந்தரமில்லாதது என்பதுதான். எல்லாம் காலப்போக்கில் மாறக் கூடியது, மறையக் கூடியது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதனால் வாழ்வில் உச்சம் தொட்ட பல மனிதர்கள் இயல்பான மனிதர்களாக யதார்த்தமாக வாழ்கின்றனர்.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டு இருப்பவர் மம்முட்டி. இந்த ஆண்டின் துவக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான பிரமயுகம் படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. மிகவும் அற்புதமான, அழுத்தமான நடிப்பை தந்திருந்தார். அதே போல் சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான டர்போ படமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழில் பல படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் எதிரும் புதிரும் மறுமலர்ச்சி ஆனந்தம் பழசிராஜா பேரன்பு கார்மேகம் உள்ளிட்ட படங்களில் மம்முட்டி நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி கூறியதாவது, திரைப்படங்களில் நடிப்பது என்பது எனக்கு மூச்சு விடுவது போன்றது. சினிமாவில் நடிப்பதை நான் எனது சுவாசமாக நினைக்கிறேன். சினிமா இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ரசிகர்கள் கொடுக்கும் தைரியம் மற்றும் அன்பினால் மட்டுமே வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். அவர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். ஆனால் அவர்கள் என்னை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.
ஒரு வருடம், 10 வருடம் அல்லது 15 வருடங்கள் அவ்வளவுதான்; உலகம் முடியும் வரை மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கக் கூடாது. அது யாருக்குமே நடக்காது. ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான் என்று நடிகர் மம்முட்டி எதார்த்தமாக பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலித்து பெரிய வெற்றிப் படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





