கேரளாவில் மலையாள சினிமா துறையில், நடிகர்கள், இயக்குனர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பெருகிய நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கையும் அதை உறுதிப்படுத்திய நிலையில், இந்த விவகாரம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இப்போது தமிழ் சினிமாவில் இது புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரையுலகில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல், துன்புறுத்தல் அதிகமாக இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக பெண்கள், நடிகைகள் பாலியல் துன்புறுத்தல், நெருக்கடிகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்ற புகார்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் ஏப்ரல் 22ம் தேதி விசாகா கமிட்டி பரிந்துரை அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி, கமிட்டியின் தலைவர் நடிகை ரோகிணி, உறுப்பினர்கள் நடிகைகள் குஷ்பு, சுகாசினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. பாலியல் புகார்களை விசாரித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் திரைத்துறையில் 5 ஆண்டுகள் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்களுக்கு முதலில் எச்சரிக்கை விட்பபட்டு, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் சொல்ல ஏற்கனவே தனி தொலைபேசி எண் உள்ள நிலையில், தற்போது இ மெயில் மூலமாகவும் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல் இந்த கமிட்டி மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மீடியாக்களில் பேச வேண்டாம். யூ டியூப்பில் சினிமா துறையினர், அவர்களது குடும்பம் குறித்து அவதூறு பதிவிடப்படுவதால், பாதிக்கப்படுவோர் சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தால், கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.





