தமிழ் சினிமாவில் சில இளம் ஹீரோக்கள் சாக்லேட் பாய்களாக டீன் ஏஜ் பெண்களின் மனங்களை கவர்ந்துவிடுவர். கடந்த 1990களில் அரவிந்த் சாமி, மாதவன், அஜீத்குமார் என்ற அந்த வரிசையில் இருந்தவர்தான் அப்பாஸ். நிறைய இளம்பெண்களுக்கு அப்போது அப்பாஸ்தான் கனவு நாயகனாக இருந்தார்.
காதல் தேசம், விஐபி, சுயம்வரம், படையப்பா, கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன், திருட்டுப்பயலே, பம்மல் கே சம்பந்தம், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த பல ஆண்டுகளாக படங்களில் நடிக்க வாய்ப்பின்றி இருக்கிறார் நடிகர் அப்பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களை பொருத்தவரை அடுத்தடுத்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தால் மட்டுமே சினிமாவில் தாக்குபிடித்து பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க முடியும். தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்தால், அடுத்த நடிகர்களுக்கு அந்த வாய்ப்பு கைமாறி போய் விடும்.
அதனால் பல நல்ல நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் மிக எளிதாக தோற்றுப் போகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், நல்ல கதைகளை, நல்ல இயக்குநர்களை தேர்வு செய்ய அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காததுதான். பணத்துக்காக முக்கியத்துவமே இல்லாத படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டு நல்ல பட வாய்ப்புகளை பலரும் இழப்பது பலருக்கும் துரதிஷ்டமாக நடக்கிறது.
அப்படி ஒரு மோசமான சம்பவம், நடிகர் அப்பாஸ் சினிமா வாழ்விலும் நடந்திருக்கிறது. அந்த 1990 காலகட்டங்களில் மிக பிஸியான ஒரு நடிகராக இருந்திருக்கிறார் அப்பாஸ். அப்போது மேனேஜர் வசம் அவரது படங்கள் கால்ஷீட், படங்கள் கதை கேட்பது உள்ளிட்ட பொறுப்புகளை தந்திருக்கிறார். அவர் நிறைய படங்களை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அப்போது மலையாள படவுலகில் பெரிய டைரக்டர்களில் ஒருவராக பாசில், காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக நடிக்க அப்பாஸ் கால்ஷீட் கேட்டிருக்கிறார். ஆனால் மேனேஜர், கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டார். பிறகு அந்த கேரக்டரில் விஜய், ஷாலினியுடன் நடிக்க அது மிகப்பெரிய வெற்றிப்படமாக விஜய்க்கு அமைந்தது. சமீபத்தில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் பண்ணிவிட்டேன் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் அப்பாஸ் விரக்தியாக குறிப்பிட்டுள்ளார்.





