காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிய நடிகர் அப்பாஸ் ஆரம்ப கட்டத்தில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள் காரணமாக முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். ஆரம்ப காலகட்டங்களில் இவரது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த வேளையில் ஆண்டுகள் செல்ல செல்ல இவரின் திரைப்பயணம் பின்னடைவை சந்தித்தது. 2000-ஆண்டுகளில் ஆரம்பத்தில் பல்வேறு நடிகர்களின் வரவினாலும் இவர் நடித்த படங்கள் அடைந்த தொடர் தோல்விகளாலும் மெல்ல மெல்ல அப்பாஸ் தமிழ் திரையுலகில் தனது இடத்தை இழக்க துவங்கினார்.

ஒருபுறம் ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் தனியாக அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் முற்றிலுமாக பட வாய்ப்பினை இழந்து வருமானத்திற்கே கஷ்டப்பட்டதை அப்பாஸ் சிலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பே இல்லை என்பதன் காரணமாக வெளிநாடு சென்று செட்டிலான அப்பாஸ் பல்வேறு தொழில்களை செய்து தற்போது நியூசிலாந்தில் ஓரளவு செட்டிலாகி வசித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ள அப்பாஸ் தமிழ் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஹார்பிக் விளம்பரத்தில் நடித்தது ஏன்? என்ற காரணத்தையும் கூறியுள்ளார். நடிகர் அப்பாஸ் திரைப்பட வாழ்ப்பை இழந்த பிறகு ஹார்பிக் விளம்பரத்தில் நடித்த போது பலராலும் கேலி செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த விளம்பரத்தில் நடித்தது ஏன்? என்று கூறிய அப்பாஸ் பேசுகையில் :

ஹார்பிக் விளம்பரம் ஒன்னும் பண்ணக்கூடாத விடயம் கிடையாது. ஹார்பிக் என்பது ஒரு கிருமி நாசினி. நம் வீட்டில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஒரு பொருள். அது எல்லா கிராமத்தில் இருக்கும் மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு அளிக்கும் விதமாகவே அந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதோடு ஹார்பிக் விளம்பரம் என்னை தேடி வந்த போது நான் பட வாய்ப்புகள் இன்றி கடினமான சூழலில் தான் இருந்தேன். அதோடு எனக்கு அவர்கள் நல்ல தொகையும் சம்பளமாக பேசியதால் அந்த விளம்பரத்தில் நடித்தேன். அந்த விளம்பரத்தில் நடித்தது குறித்து எப்போதும் நான் வருத்தப்பட்டதே கிடையாது.
ஏனெனில் எளிய மக்களுக்கும் இந்த பொருளில் உள்ள நன்மையை கூறும் ஒரு கருத்தாகவே அந்த விளம்பரம் இருந்ததால் அதில் ஒப்புக்கொண்டு நடித்தேன். அதோடு எட்டு ஆண்டுகள் அனைத்து மொழிகளிலும் நான் ஹார்பிக் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தேன். அந்த விளம்பரத்தின் மூலம் வந்த வருமானத்தினால் நான் எட்டு ஆண்டுகள் சாப்பிட்டு இருக்கிறேன். எனவே அந்த விளம்பரத்தில் நடித்ததால் எப்போதும் நான் வருத்தம் அடைந்தது கிடையாது என அப்பாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.





