தமிழ் சினிமாவில் ஜனரஞ்சகமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டியவர் முரளி. அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஹீரோவான முரளி, ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனக்கே உண்டான நடிப்பின் மூலம் புத்துயிர் கொடுக்கும் முரளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.
இவரது மூத்த மகனான அதர்வா, பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. ஆனால் பானா காத்தாடி திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
அதன் பிறகு வெளிவந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படமும் அதர்வாவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இப்படியான சூழலில் தான் இயக்குனர் பாலா உடன் அதர்வா இணைந்தார். இவர்கள் கூட்டணியில் பரதேசி படம் எடுக்கப்பட்டது. எரியும் பனிக்காடுகள் என்னும் நாவலை தழுவி இந்த திரைப்படத்தை பாலா இயக்கினார்.
இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அதர்வாவின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றது. தொடர்ந்து இரும்பு குதிரை, சண்டிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அதர்வாவுக்கு குறிப்பிட்ட தக்க வெற்றியை கொடுத்தது ஈட்டி திரைப்படம்.
தடகள வீரராக நடித்து அந்த திரைப்படத்தில் கவனத்தை ஈர்த்தார் அதர்வா. பிறகு வெளிவந்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாத, குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உள்ளிட்ட திரைப்படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை. தற்போது அவர் நிறங்கள் மூன்று, ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிப்பை தாண்டி இயக்குநராகும் ஆசையில் அதர்வா இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான முழு முயற்சியில் நடிகர் இறங்கி இருப்பதாகவும், விரைவில் அதர்வா இயக்குனராகவும் குறித்த படத்தின் தகவல் வெளியாகும் என்றும் திரை துறை வட்டாரத்தில் பேசப்படுகின்றன. அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடித்திருக்கும் நேசிப்பாயா திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





