தமிழ் சினிமாவில் கிராமத்து மண் சார்ந்த கதைகளை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் முத்தையா. சசிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முத்தையா, அவரை வைத்தே குட்டி புலி எனும் படத்தை இயக்கினார். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக செம ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளியதால் பலராலும் கவனிக்கப்பட்டார் முத்தையா.

குட்டிப் புலிக்கு பிறகு அவர் எடுத்த திரைப்படம்தான் கொம்பன். ராமநாதபுரம் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க, ராஜ்கிரண், லட்சுமிமேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே தலைப்பிலிருந்து படத்தின் காட்சிகள் வரை பல்வேறு விஷயங்கள் சர்ச்சையை கிளப்பியது. பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மாமனார் மருமகன் உறவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஆக்சன் காட்சிகள் தூக்கலாக இருந்ததால் கொம்பனை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர் தமிழ் ரசிகர்கள். இதையடுத்து விஷாலுடன் முத்தையா கை கோர்க்க, மருது திரைப்படம் உருவானது. இதுவும் வசூல் ரீதியாக வரவேற்பு பெற்றாலும், முத்தையா ஒரே விதமான படங்களை எடுப்பதாக விமர்சனம் இருந்தது.

பின்னர் சசிகுமாருடன் மீண்டும் இணைந்த முத்தையா, மறுபடியும் அதே பாணியில் கொடிவீரன் எனும் படத்தை கொடுக்க, அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. பிறகு, கௌதம் கார்த்திக் உடன் சேர்ந்து பணியாற்றிய முத்தையா, தேவராட்டம் படத்தை எடுத்தார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவான இந்த திரைப்படம், தென் தமிழகத்தில் நல்ல வசூலை எட்டியது.
அதேசமயம் முத்தையா தொடர்ந்து ஒரே மாதிரி படத்தை எடுப்பதாகவும், இது சலிப்பை தட்டுவதாகவும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத இயக்குனர், விக்ரம் பிரபுவை வைத்து புலிக்குத்தி பாண்டி என்னும் படத்தை எடுத்தார். தொடர்ந்து கார்த்தியுடன் மீண்டும் இணைந்து அவர் எடுத்த விருமன், ஆர்யாவுடன் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன.
தனது ரூட்டை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் முத்தையா இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறினர். இந்த நிலையில்தான், இயக்குனர் முத்தையா அடுத்ததாக அருண் விஜய் உடன் இணைந்து இருக்கிறார். செவன் ஜி தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் இந்தத் திரைப்படத்தின் சூட்டிங், செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த படங்களை நினைவில் வைத்து, தனது கதைக்களத்தை முத்தையா இதில் மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.





