தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருப்பவர் அஜீத்குமார். சினிமாவில் நடிப்பதை விட விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது பைக் ரேஸ் கார் ரேஸ் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் அவர் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் விடாமுயற்சி குட்பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்த நடிகர் அஜீத்குமார் துபாயில் நடந்து வரும் கார் பந்தயத்தில் அவர் பங்கேற்றார். ஏற்கனவே 2002 2003 2004ம் ஆண்டுகளில் அஜீத்குமார் கார் ரேஸில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சினிமாவில் தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
தற்போது துபாயில் நடந்து வரும் 24 எச் என்ற கார் ரேஸில் அஜீத்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி தற்போது பங்கேற்றுள்ளது. இதற்காக கடந்த சில தானங்களாக அஜீத்குமாரும் அவரது அணி சார்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியிலும் அஜீத் குமாரும் அவரது அணி வீர்களும் பங்கேற்றனர். இதில் அவர்கள் ஏழாவது இடத்துக்கு அவர்கள் வந்தனர்.
இதற்கிடையே 2 தினங்களுக்கு முன்பாக கார் ரேஸ் பயிற்சியில் அஜீத்குமார் ஈடுபட்டார். அப்போது அவர் ஓட்டிச் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. ஆனால் அவருக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமோ பாதிப்போ ஏற்படவில்லை. அதனால் தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் துபாய் கார் ரேஸில் இருந்து நடிகர் அஜீத்குமார் விலகுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து அஜீத்குமாரின் ரேஸிங் அணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து உடல்நலம் மற்றும் அணியின் நலனை கருத்தில் கொண்டு துபாய் 24 எச் போட்டியில் இருந்து அஜீத்குமார் விலகுகிறார்.அஜீத்குமார் ரேஸிங் சார்பில் 414 , 901 என்ற இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கின்றன.
இதில் ஒரு அணியில் மட்டுமே போட்டியாளராக அஜீத்குமார் பங்கேற்க இருந்த நிலையில் தற்போது அவர் விலகியுள்ளார். எனினும் அணியின் உரிமையாளராக அவர் போட்டியில் தொடர்கிறார். கடினமான மற்றும் தன்னலமற்ற இந்த முடிவை அஜீத் குமாரே தன்னிச்சையாக எடுத்துள்ளார். அஜீத்குமாரின் அணி தொடர்ந்து கார் ரேஸிங் போட்டியிடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அஜீத்குமார் ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.





