நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். இப்போது அவர் நடித்த குட் பேட் அக்லி படம் அடுத்த மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் விதவிதமான கெட் அப்புகளில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிளாக ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த வாரத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இது ஜெயிலில் அஜீத்குமார் பாடி ஆடும் ஒரு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜீத்குமார் இப்போது கார் ரேஸ் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் கார் ஓட்டும் போட்டியாளராகவும் அவர் கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் கார் ரேஸ் நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மற்றொரு டாப் ஸ்டார் நடிகரான விஜய், கடந்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு போய்விட்டார். இப்போது அவர் நடித்து வரும் ஜனநாயகன் படத்துடன் தன் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டார். அவரது கவனம் முழுவதும் அரசியல் களத்தில் இருக்கிறது.
அதே போன்று நடிகர் அஜீத்குமாரும் கார் ரேஸ் பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் என விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இத்தாலியில் நடந்து வரும் 12வது மிச்செலின் முகெல்லோ கார் ரேஸில் அஜீத்குமார் கலந்துக் கொண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்றுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அஜீத்குமார், துபாய் 24 நேரம் கார் பந்தயத்துக்கு பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் ஈடுபடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தொடர்ச்சியான கார் பந்தய போட்டிகள் நல்ல அனுபவங்களை தந்துக் கொண்டு இருக்கின்றன. கார் பந்தயத்தை மிகவும் ரசித்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறேன். ஒரு அணியின் வீரராக, தலைவராக இருப்பது கவுரவம். இன்னும் பல ஆண்டுகளுக்கு கார் பந்தயங்களில் ஈடுபட விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அஜீத்குமார் சொல்வதை கேட்ட அவரது ரசிகர்கள், போற போக்கை பார்த்தால் விஜய் மாதிரியே இவரும் கார் ரேஸ் பைக் ரேஸ் என போனால், சினிமாவில் நடிப்பதே கேள்விக்குறியாகி விடும் என்றும் புலம்புகின்றனர்.





