அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பா ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ் காலா கபாலி சார்பட்டா பரம்பரை தங்கலான் போன்ற பல படங்களை இயக்கியவர். திரைப்படங்களை இயக்கியது மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார். இயக்குனர் பா ரஞ்சித் தனது படங்களில் சனாதன கொள்கைகளை எதிர்த்து வருபவர்.
இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருப்பதாவது, எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காகவும் அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தன் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்க்.
கடந்த 2024ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடர்கிறவராகவும் அவரது கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களது பாதை அமைந்திருக்கிறது.
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திருவிக நகர் (தனி) தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். ஆம்ஸ்ட்ராங்க் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தில் ஒரு பகுதியாகவே பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் தேர்தல் பங்கெடுப்பும் அதில் அவர் பெறவேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது.
இந்த புரிதலோடு திரு வி க நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது என்று இயக்குனர் பா ரஞ்சித் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார். அவரது இந்த ஆதரவு நிலைப்பாடு அவருக்கு எதிரான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியாக இருந்தாலும் அவர் நிற்பது அதிமுக பாஜக கூட்டணியில். அப்படி இருக்கும்போதும் காலம் முழுவதும் சனாதன எதிர்ப்பை பதிவு செய்து வரும் இயக்குனர் ரஞ்சித் இப்போது தனது கொள்கையை தளர்த்திக் கொண்டு ஏன் என்டிஏ கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்? கொள்கையா பழக்கமா என்று வந்தால் கொள்கை பக்கம் தான் நிற்க வேண்டும். அதை இயக்குனர் பா ரஞ்சித் மறந்து விட்டார் என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.





