தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இப்போது 62 வயதிலும் இளமையான தோற்றத்தில் காணப்படும் ஒரு கலைஞர். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். சமீபகாலமாக வில்லன் கேரக்டரில் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, சேவகன் பிரதாப் படங்களை நான் இயக்கி தயாரித்தேன். அப்போது பல கஷ்டங்களை சந்தித்தேன். இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என யாருமே எனக்கு உதவவில்லை. அதனால் சினிமா இன்டஸ்ட்ரி மீதே நான் பயங்கர கோபத்தில் இருந்தேன். இப்போது அது தவறென புரிகிறது. அப்படி யாரும் உதவ வேண்டிய அவசியம் இல்லை.
அப்போது இருந்த வெறுப்பில் படங்களில் இனி நடிக்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். பல படங்களில் நடிக்க அழைத்தனர். இயக்குனர் ஷங்கரிடம் ஜெண்டில்மேன் கதையை கூட கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என்று சொல்லவே முடிவு செய்திருந்தேன். ஆனால் கதையை கேட்ட பிறகு அப்படி சொல்ல மனம் வரவில்லை. சூப்பர் சார், நாம் பண்ணலாம் என்று சொல்லி விட்டேன்.
ஜெண்டில்மேன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெய்ஹிந்த் முதல்வன் ஆயுதபூஜை கர்ணா என தொடர்ந்து வெற்றி படங்களை தந்தேன். தோல்வி படங்களை தந்த போதும் என்னுடைய ரசிகர்கள், நீ நல்ல படம் கொடுத்தால் பார்க்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களை நான் எப்போதுமே மறக்க முடியாது.
நான் 29 வயதில் இயக்குனராக போது பல கஷ்டங்களை சந்தித்தேன். சேவகன் பிரதாப் படங்கள் பெரிய வெற்றியை தந்தன. ஆனால் சில படங்கள் மிக மோசமான தோல்வியை தந்த போது இனி சினிமாவில் நமக்கு வேலையில்லை என்ற நிலமை வந்துவிட்டது. பேக்கை தூக்கிக்கொண்டு கிளம்பும் சூழ்நிலை வந்துவிட்டது.
அப்போது பேக் தான் இருந்தது. பெட்டி இல்லை. ஏனென்றால் எல்லா சொத்துகளையும் சினிமாவில் போட்டு இழந்து விட்டேன். பணம் எல்லாம் போய்விட்டது. ஏதாவது டிரைவிங் வேலைக்கு போகலாம். கார் டிரைவராக வேலை பார்க்கலாம். அல்லது பாக்ஸிங் பைட் பயிற்சியாளராக போகலாம் என்று நினைத்தேன். ஏனென்றால் சினிமா தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. என்னை யாரும் நடிக்க கூப்பிடலே. என்ன செய்வது என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





