கடந்த 1980களில் நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அர்ஜூன். இந்த படத்தை இராம நாராயணன் டைரக்ட் செய்திருந்தார். தொடர்ந்து சங்கர் குரு கல்யாண கலாட்டா பாட்டாளி மகன் படிச்சபுள்ள தாயம் ஒண்ணு என பல படங்களில் நடித்த அர்ஜூன் அதிரடி சண்டை காட்சிகளில் அசத்தினார். அதனால் ஆக்சன் கிங் அர்ஜூன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமாவில் தன் ஆற்றலை விரிவுப்படுத்திய அர்ஜூன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதில் ஜெண்டில்மேன் முதல்வன் ஜெய்ஹிந்த் செங்கோட்டை சேவகன் ரோஜாவை கிள்ளாதே ரிதம் வானவில் பிரதாப் வேதம் என அர்ஜூன் நடித்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
ஒரு கட்டத்துக்கு பிறகு நடிகர் அர்ஜூன் சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதில் மங்காத்தா இரும்புத்திரை லியோ விடாமுயற்சி போன்ற படங்கள் அதிக கவனம் பெற்றன. அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவை, நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கு சமீபத்தில் திருமணம் செய்துக்கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜூன் இப்போது 60 வயதுகளை கடந்த நிலையில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக பணிசெய்த சுபாஷ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி நடிக்கிறார். ஏற்கனவே நடிகர் அர்ஜூன் நடித்த வானவில் என்ற படத்தில்தான் நடிகை அபிராமி அறிமுகமானார். இப்போது மீண்டும் இந்த படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக அபிராமி நடிக்கிறார். மேலும் அர்ஜூன் – அபிராமி தம்பதியின் மகள் கேரக்டரில் ஸ்டார் பட நாயகி ப்ரீத்தி முகுந்தன் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
வழக்கமாக அர்ஜூன் படங்கள் என்றாலே அதில் ஆக்சன் காட்சிகளே அதிகமாக இருக்கும். கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக நாட்டை காப்பாற்றும் தேசப்பற்று மிக்க படங்களில் அதிகமாக நடித்தவர் நடிகர் அர்ஜூன்தான். அதே நேரத்தில் ரிதம் வேதம் போன்ற மென்மையான உணர்வுகளை சொன்ன படங்களிலும் அர்ஜூன் நடித்திருக்கிறார். இது அப்பா மகள் உறவை சொல்லும் அதுபோன்ற ஒரு படமாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.





