தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தினேஷ். அந்த படமே அவரது பெயரிலும் நிலைத்து விட்டது. ஒரு நாள் கூத்து லப்பர் பந்து குக்கூ அண்ணணுக்கு ஜே விசாரணை உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.
இதில் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கிய குக்கூ படத்தில் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் கண் பார்வையற்ற கேரக்டரில் படம் முழுவதும் வருவார். அதே போல் படத்தின் நாயகிக்கும் கண்பார்வை இருக்காது. இருவரும் காதலிக்கும் நிலையில் இறுதியில் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் கதை.
இந்த படத்தில் பார்வையற்றவராக நடித்த தினேஷ், கண் பார்வை திறந்த நிலையில் இருக்க கண் சிமிட்டாமல் பெரும்பாலான காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் கண்களின் கரு விழிகள் இரண்டும் மூக்கை நோக்கி பார்த்தபடி கழுகு பார்வை கொண்டவராக படம் முழுவதும் வந்திருப்பார்.
இதற்காக அதிகளவில் கண்களை ஒரு நிலையில் வைத்து நடித்ததால் அவரது பார்வை வெகுவாக பாதிக்கப்பட்டது. கண்களை பொருத்த வரை இயல்பான நிலையில் இல்லாமல் மாதக்கணக்கில் ஷூட்டிங்குக்காக அவரது பார்வையை நடிப்புக்காக மாற்றி நடித்ததால் அவருக்கு கண்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கூறியதாவது, இப்போது என்னை கேட்டால் குக்கூ படம் நான் பண்ணியிருக்க கூடாதுன்னு சொல்வேன். அந்த படம் பண்ணுனால தான் 5 வருஷம் எனக்கு கண்ணுல தொடர்ந்து பிரச்னை இருந்தது. தலைவலியா இருக்கும். கண்ணுல அப்பப்போ தண்ணீ வந்துகிட்டே இருக்கும்.
இப்போ வரைக்கும் எனக்கு கண்ணுல பிரச்னை இருந்துகிட்டே இருக்குது. அந்த படத்துக்காக அவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணியிருக்க வேண்டாம்ன்னு இப்போ நினைக்கிறேன். இருந்தாலும் அந்த படத்தை இப்போ பார்த்தாலும் ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டறாங்க. அது ரொம்ப சந்தோஷம்தான் என்று அட்டக்கத்தி தினேஷ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





