இசைஞானி இளையராஜா சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் அவர் லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வேலியன்ட் என்ற சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இசை உலகில் புதிய சாதனையை படைத்தார். தொடர்ந்து 13 நாடுகளில் அந்த வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய இளையராஜா திட்டமிட்டுள்ளார்.
இசைத்துறையில் அவரது அரை நூற்றாண்டு சாதனைகளை பாராட்டி தமிழக அரசு இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளது. இது அரசு விழாவாக நடத்தப்படும் நிலையில் இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும், தமிழக முதல்வர் ஸ்டாலின் முதன்மை விருந்தினராகவும் பங்கேற்க உள்ளனர்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வரும் பல புதிய படங்களில் பழைய படங்களில் இருந்து பாடல்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். அதில் பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களாகவே அவை இருக்கின்றன. தன்னுடைய இசையில் உருவான பாடல்களை மற்ற படங்களில் பயன்படுத்த கூடாது. அதற்கு முறைப்படி என்னிடம் அனுமதி பெற வேண்டும் என இளையராஜா கூறிய நிலையில் பலரும் அதை பின்பற்றுவது இல்லை.
இதனால் இளையராஜா, தனது பாடல்களை பயன்படுத்தும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, அந்த பாடல்களை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், தனது பாடல்களை அனுமதியின்றி அந்த படத்தில் பயன்படுத்தியதற்காக தனக்கு நஷ்ட ஈடும் கேட்டு வருகிறார். இதை சிலர் ஆதரிக்கவும் பலர் எதிர்க்கவும் செய்கின்றனர்.
சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூவா தாரேன் என் ஜோடி மஞ்சக்குருவி இளமை இதோ இதோ ஆகிய பாடல்களை பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா, அந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரிய அளவில் வைரலானது.
இதுகுறித்து நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கூறியதாவது, நான் நடித்த லப்பர் பந்து படத்தில் இளையராஜா இசையமைத்த நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் இடம்பெற்றது. இதற்காக கங்கை அமரன் சாருக்கும் நாங்கள் நன்றி சொன்னோம். இளையராஜா சாரை நேரில் சந்தித்தும் நன்றி சொன்னோம். ரைட்ஸ் மற்றும் அக்ரீமெண்ட் என்பது இசையமைத்தவர்களுக்கு என்னைக்கும் அது போய்கிட்டே தான் இருக்கணும். ஏனென்றால் அது அவங்ககிட்ட இருந்து வந்தது. அதற்கு நம்ம மரியாதை செலுத்த வேண்டும். ராஜா சார் கேட்பது தார்மீகமாகவும் தர்மமாகவும் ரொம்ப கரெக்டான விஷயம்தான். அதை நாம் கேட்காமல் தர வேண்டும் அதை கேட்கிற மாதிரி வெச்சுக்க கூடாது என்று அட்டகத்தி தினேஷ் கூறியிருக்கிறார்.





