விஜய் டிவி மூலம் குக்வித் கோமாளி, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாலா. சில சினிமா படங்களிலும் நடித்துக்கொண்டு வளரும் நடிகராக இருந்து வருகிறார். ஆனால் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வலராக இருந்து வருகிறார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அந்தியூர் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் வசதிக்காக, சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி தந்திருக்கிறார். விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தந்திருக்கிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் பாவா லட்சுணன், போண்டாமணி ஆகியோருக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று நிதியுதவி செய்திருக்கிறார். மேலும், உங்கள் இன்ஸ்டாகிராமில் என் மகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ சொல்லுங்கள் என ஒரு பெண்மணி போனில் சொல்ல, அதற்கென்ன நானே உதவுகிறேன் என, அவரது வீட்டுக்குச் சென்று ரூ. 1 லட்சம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் பாலா.
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வௌ்ளத்தில் மூழ்கி தள்ளாடுகிறது. கார்த்தி, சூர்யா போன்றவர்கள் நிதியுதவி செய்துள்ளனர். பார்த்திபன் போன்றவர்களும் களத்தில் இறங்கி உதவி வருகின்றனர். இதுதவிர எம்எல்ஏகள், கவுன்சிலர்கள் மற்றும் அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிக்ர் பாலா, தனது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2.15 லட்சத்தை எடுத்து, ஒரு குடும்பத்துக்கு ரூ. 1000 வீதம், 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொடுத்து உதவியுள்ளார். ஏனெனில் மழைவெள்ளத்தால் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து தத்தளிக்கும் மக்களுக்கு இந்த நிதியுதவி அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பசியாற உதவும்.
ரஜினி, கமல், விஷால், விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி போன்ற பெரிய நடிகர்கள் இப்போதும் தங்களது ரசிகர்களை அனுப்பிதான், மக்களுக்கு உதவ சொல்கிறார்களே தவிர, அவர்களாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ முன்வர மாட்டார்கள். அதே வேளையில், நிவாரண தொகைகளை தமிழக அரசிடம் செக் ஆக கொடுத்து புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடிக்கொள்வார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக சென்று, அவர்களை சந்தித்து உதவ மாட்டார்கள். இதுதான் வழக்கமாக நடக்கிறது. ஆனால் பாலா போன்ற சிறிய நடிகர்கள், ரசிகர்களால் பெரிய அளவில் வளராத போதிலும் அவர்களை தேடிச் சென்று உதவி தங்களது பெரிய குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.





