மலையாள நடிகர் பகத் ஃபாசில், வைகைப்புயல் நடிகர் வடிவேலு இணைந்து நடித்த மாரீசன் படம் நாளை வெளியாக உள்ளது. ஏற்கனவே வடிவேலு பகத் ஃபாசில் கூட்டணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனால் மாரீசன் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் டைரக்ட் செய்திருக்கிறார். ஏற்கனவே டிரெய்லர் வெளியாகி அதிக கவனத்தை பெற்ற நிலையில் மாரீசன் படம் நாளை 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஆனால் மாரீசன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தில் நடித்த வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் இருவரும் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். ஆனால் நடிகர் வடிவேலு மட்டும் இரண்டு நாட்களாக சில சேனல்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்று மாரீசன் படம் குறித்து தனி ஆளாக பேசி வருகிறார்.
ஆனால் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என தான் நடிக்கும் எந்த மொழியிலும் தனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் பகத் ஃபாசில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை அவர் ஒரு தனிக் கொள்கையாக வைத்திருக்கிறார். நடிகர் அஜீத்குமார் போலவே மலையாள நடிகர் பகத் ஃபாசிலும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஒரு வட இந்திய பத்திரிகைக்கு நடிகர் பகத் ஃபாசில் பேட்டி அளித்திருக்கிறார். அப்போது மாரீசன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் பகத் ஃபாசில் கூறியதாவது, இந்த படம் கொஞ்சம் செலவு வைக்கும் விதமாகத்தான் அமைந்தது. மிக நீண்ட லொகேஷன்கள் அடிக்கடி படப்பிடிப்பில் குறுக்கிட்ட மழை போன்றவற்றால் படப்பிடிப்பு தேதிகளையும் இடங்களையும் மாற்றி மாற்றி திட்டமிட வேண்டி இருந்தது. சில காட்சிகளை முன்கூட்டியே எடுக்க வேண்டியிருந்தது. படம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் யாரையும் நம்ப முடியாது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உங்களால் யூகிக்க முடியாது. ஆனால் இந்த படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் அனைவரையும் தாராளமாக நம்பலாம். இந்த படத்தை பொருத்தவரை மிக அற்புதமாக எழுதப்பட்ட கதை. என்ன சொல்லப்பட்டதோ அதை படமாக எடுத்திருக்கிறார்கள். படம் பார்க்கும் ரசிகர்கள் இதை எப்படி ரசிக்க போகிறார்கள் என்பதை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் என்று நடிகர் பகத் ஃபாசில் அந்த நேர்காணலில் மனம் திறந்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





