தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக உள்ள விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி அதன் தலைவராக கட்சியை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கட்சி பெயரை அறிவித்து அரசியல் இயக்கத்தை துவங்குவதாக விஜய் அறிவித்தார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பனையூரில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெகு பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பும் ஆரவாரமும் அதிகரித்து காணப்பட்டது.
அன்று காலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் திரண்டதால், மாலை 4 மணிக்கு மாநாட்டை துவங்க திட்டமிட்டிருந்த நடிகர் விஜய், முன்னதாக மதியம் 2 மணிக்கே மாநாட்டை துவங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் தனது அரசியல் பேச்சை துவங்க இருந்த நடிகர் விஜய், மக்களின் கூட்டம் கட்டுக்கடுங்காமல் போனதால், மாலை 5 மணிக்கே பேச வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
எனினும் இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பேசியது பெரிய அளவில் தமிழக மக்கள் மத்தியில், அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசையும், தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசையும் நேரடியாக தாக்கி பேசிய நடிகர் விஜய், பல விஷயங்களை பகிரங்கமாக பேசி மக்களை ஆச்சரியப்படுத்தினார். தன்னைப் பற்றிய விமர்சனங்களை பற்றி வெளிப்படையாக கூறிய அவர் அதற்கான பதிலையும் கோபத்துடன் வெளிப்படுத்தினார்.
வரும் 2026ம் ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெறும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் பிரபல நடிகர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்காத போதும் விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தது பெரிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். இவர் பல படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக சிவாஜி, கோ, கவண், தலைநகரம், சிங்கம், தாம் தூம், ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கன்னிமாடம், சார் என்ற 2 படங்களையும் இயக்கியுள்ளார். விஜய் நடத்திய அரசியல் மாநாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், யப்பா… உன் கூடவுமா அரசியல் பண்ணனும்? பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு, சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு… எழுதிக் கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன், முடிவு??? பார்ப்போம் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.





