சரத்குமார் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கான ஹீரோ மார்க்கெட் குறைந்துப் போனது. அதன் பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் சரத்குமார். எனினும் சமீப காலமாக சரத்குமார் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். அதில் அவருக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் அமைந்த திரைப்படமாக இருக்கிறது “போர் தொழில்”.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவந்தது. தமிழ் சினிமாவில் மிகவும் அட்டகாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. உண்மையில் இத்திரைப்படம் இந்தளவுக்கு சிறப்பாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இத்திரைப்படம் ஒரு விஷுவல் டிரீட்டாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
திரைப்படத்தில் இடம்பெற்ற பல டிவிஸ்ட்டுகள் பார்வையாளர்களை அசரவைப்பது போல் இருந்தது. அந்தளவுக்கு மிகவும் நேர்த்தியாக திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. பலரும் இத்திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த மாதமே இத்திரைப்படம் ஓடிடியில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு வழியாக வருகிற 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதலால் திரையரங்கில் தவறவிட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இத்திரைப்படம் செய்த ஒரு அபார சாதனை குறித்த ஒரு மாஸ் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “போர் தொழில்” திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு 30 கோடிகள் லாபத்தை கொடுத்துள்ளதாம். இத்திரைப்படத்தை தயாரித்த இரண்டு தயாரிப்பாளர்களும் அதனை சரிசமமாக பிரித்துக்கொண்டார்களாம். இத்திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 5 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.





