திமுக கட்சி சார்ந்தவரான திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதில் நடிகர் போஸ் வெங்கட் கூறியதாவது, முன்பெல்லாம் அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாகரிகம் இருந்தது. ஆனால் 2023ம் ஆண்டுக்குப் பிறகு சமூக வலைதளங்கள் வந்த பிறகு அந்த நாகரீகமே போய்விட்டது.
ஒருத்தன் வீட்டுக் குப்பையை இன்னொருத்தன் வீட்டு குப்பை தொட்டியில் கொட்டுவது போல தனிப்பட்ட விமர்சனங்களை பரப்புகிறார்கள். படிப்பு பண்பு அறிவு உள்ளவர்கள் தான் பிறரை மதிப்பார்கள். இவை இல்லாதவர்கள் தான் சமூக வலைதளங்களை குப்பை தொட்டியாக பயன்படுத்துகிறார்கள். இதனால் நாகரீகமான விவாதம் குறைந்து தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது. சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை இளைஞர்கள் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது நல்லது தான்.
ஆனால் சட்டமன்றத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது? விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி என்ன ஆனது? பெண்களுக்கு 2500 ரூபாய் கொடுத்துட்டாங்களா? 6 சிலிண்டர் தரேன்னு சொல்லிட்டு 3 சிலிண்டர்தானே தரேன்னு சொன்னாங்க? இதையெல்லாம் யாரும் கவனிச்சாங்களா? அதை எல்லாம் விட்டுட்டு விஜய் அண்ணா என்ன உடை போட்டு இருக்காரு? பட்டுச்சட்டையில் வந்திருக்கிறார் என்று வைரல் பண்றாங்க.
அந்த நேரத்துல நாட்டுல கொலைகள் நடக்குது. அத பத்தி கவலை இல்லை. அரசியலை ரசனைக்காக பார்க்காமல் நமக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளும் அறிவு மக்களுக்கு வேணும். அப்படிப்பட்ட அறிவார்ந்த அரசியலா இங்க நடக்குது? திமுக பல ஊழல்களை செய்து இருக்கு, எல்லாத்துக்கும் ஆதாரம் வச்சிருக்கேன். ஆனா காட்ட மாட்டேன். உள்ள வச்சிருக்கேன். பின்னாடி இருக்குன்னு சொல்றாரு. குற்றச்சாட்டு சொன்னா ஆதாரத்தை முன்னாடி எடுத்துக் காட்டுங்க.
அதை விட்டுட்டு மக்களை மேனிபுலேஷன் பண்றாங்க. அவங்க கெட்டவன்னு சொல்றாரே தவிர நான் நல்லவன்னு சொல்லவில்லை. ஏனென்றால் நீ நல்லவன் இல்லை. என்றைக்கு ஒருத்தன் விமர்சனம் மட்டும் வைக்கிறானோ அவன் நல்லவனே கிடையாது. ஆதவ் அர்ஜூனா மாதிரி ஒருத்தர் எல்லாம் ஊழலைப் பற்றி பேசலாமா? நீ திமுக பத்தி பேசலாமா? நீ அங்க இருந்தே வந்தவன். இப்போ எங்கே இருக்கேன்னு எல்லாமே எங்களுக்கு தெரியும்.
ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் எல்லாம் பேசும்போது என்ன பேசுகிறார்கள்? சட்டசபையில் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். இப்போ நான் பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் அளவுக்கு அங்கு ஆக்கபூர்வமான எதுவும் நடக்கவில்லை. ரோட்டில் போகும்போது ரெண்டு பக்கமும் குப்பை கிடந்தது என்றால் ரசித்து பார்ப்போமா? அப்படித்தான் நான் இப்போது சட்டசபை பார்க்கிறேன் என்று நடிகர் போஸ்ட் வெங்கட் தவெக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.





