நடிகர் பாடகர் தயாரிப்பாளர் ஆகிய அடையாளங்களை தொடர்ந்து தனுஷ் இப்போது திரைப்பட இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அப்பா கஸ்தூரி ராஜா இயக்குனர், அண்ணன் செல்வராகவன் இயக்குனர், இப்போது அவர்களது குடும்பத்தில் 3வது இயக்குனராக தனுஷூம் வெற்றிப் படங்களை தந்து வருகிறார்.
ராஜ்கிரண், ரேவதி நடித்த ப பாண்டி படத்தை தொடர்ந்து ராயன் படத்தை இயக்கி தனுஷ் பெரிய வெற்றியை பெற்றார். இது தனுஷ் நடித்த 50வது படமாகவும் அமைந்தது. தொடர்ந்து இப்போது இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்து நடித்து வருகிறார். இதுதவிர தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இதுவரை தனுஷ் இயக்கிய 4 படங்களில் ப பாண்டி, ராயன் படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும், இட்லி கடை படமும் வெளியாக உள்ளது. டாவுன் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றன. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இட்லி கடை என வித்யாசமான தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யாமேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். அதற்கு முன்பாக வரும் டிசம்பரில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
ராயன் படத்தை தொடர்ந்து இட்லி கடை படப்பிடிப்பை தேனி மாவட்டத்தில் நடிகர் தனுஷ் துவக்கினார். அங்கு ராஜ்கிரண், சத்யராஜ் மற்றும் தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இட்லி கடை படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக வெளிநாட்டில் ஷூட்டிங் என்ற தகவல் வெளியானது.
சிங்கப்பூர் மலேசியா துபாய் ஆகிய 3 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் இட்லி கடை படப்பிடிப்பு நடத்த தனுஷ் யோசித்து வருவதாக தகவல் வெளியானது. இப்போது பாங்காக்கில் இட்லி கடை ஷூட்டிங் நடத்த தனுஷ் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் தனுஷ் உள்ளிட்ட படக்குழு பாங்காக் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன.





