நடிகர் விஜய் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தயாரித்து இருந்தார். இவர் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லியோ விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக பெரிய லாபத்தை தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கொடுத்தது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லைக் என்ற படத்தை தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் இப்போது தயாரித்து வருகிறார். அத்துடன் தனது மகனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக்கும் முயற்சியிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார். விரைவில் அதுபற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
லியோ படம் வெளியான அந்த சமயத்தில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை இயக்கும் வாய்ப்பு எச் வினோத்துக்கு வந்ததால் அந்த படம் உருவாகவில்லை.
அதன்பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் மாரி செல்வராஜ் அந்த படத்துக்கான பட்ஜெட்டை சொன்ன போது லலித்குமார் அதிர்ந்து போய்விட்டார். அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை என்னால் தயாரிக்க முடியாது என மறுத்து விட்டதால், அந்த படமும் உருவாகவில்லை.
இந்த காலகட்டத்தில் தனது நிறுவன தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்க தயாரிப்பாளர் லலித்குமார் சம்பளமாக ரூ. 34 கோடி பேசி அதில் ரூ. 14 கோடியை தனுஷூக்கு அட்வான்ஸ் ஆக தந்திருக்கிறார். ஆனால் அட்வான்ஸ் தந்து பல மாதங்களாகியும் இன்னும் நடிகர் தனுஷ் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கால்ஷீட் தேதி தரவில்லை. அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார்.
ஆண்டுக்கணக்கில் தனுஷ் தேதிக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர் லலித்குமார், அவருக்கு கொடுத்த ரூ. 14 கோடிக்காக மாதந்தோறும் பல லட்சக்கணக்கில் வட்டி கட்டி வருகிறார். இதுவே தற்போது பல கோடி ரூபாய்களை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு இறுதி வரை தனுஷ் தேதி தராவிட்டால், ரூ. 14 கோடிக்கு ரூ. 34 கோடி வட்டியே கட்ட வேண்டிய நெருக்கடியில் தயாரிப்பாளர் லலித்குமார் சிக்கித் தவிக்கிறார். தனுஷ் தானாக முன்வந்து தேதி தரும்வரை தயாரிப்பாளரின் இந்த அவல நிலை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.





